ஈரோடு இடைத்தேர்தல் அறிவிப்பைத் தொடர்ந்து திமுக தனது தேர்தல் பிரச்சாரத்தைத் தீவிரப்படுத்தியுள்ளது. அதேநேரம் அதிமுக தற்பொழுதுதான் வேட்பாளரை உறுதிப்படுத்தியுள்ளது.
இந்நிலையில், டெல்லியில் அதிமுக அவைத்தலைவர் தமிழ்மகன் உசேனும், முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகமும் கூட்டாக செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது பேசுகையில், ''உச்சநீதிமன்றத் தீர்ப்பு என்ன சொல்கிறது என்றால், பொதுக்குழுவைக் கூட்ட வேண்டும். பொதுக்குழுவை கூட்டுகின்ற அதிகாரம் அவைத்தலைவருக்கு கொடுக்கப்படுகிறது. பொதுக்குழு தேர்ந்தெடுத்த அந்த அதிகாரப்பூர்வ வேட்பாளரை அதிமுகவின் சார்பாக தேர்தல் ஆணையத்திற்கு தெரிவிக்கின்ற உரிமை அவைத்தலைவருக்கு கொடுக்கப்படுகிறது.
அவரால் தெரிவிக்கப்படுகின்ற பொதுக்குழுவின் முடிவை தேர்தல் ஆணையம் அதிமுகவின் அதிகாரப்பூர்வ முடிவாக எடுத்துக் கொண்டு உடனடியாக ஈரோடு கிழக்கு தொகுதியின் தேர்தல் நடத்தும் அதிகாரிக்கு உத்தரவிட வேண்டும் என்று உச்சநீதிமன்றம் தெரிவித்திருக்கிறது. பொதுக்குழுவை கூட்டி தேர்ந்தெடுக்கப்பட்ட அதிமுகவின் அதிகாரப்பூர்வ வேட்பாளர் தென்னரசுதான் என்பதை கழகத்தின் அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன் உச்சநீதிமன்றத் தீர்ப்பின்படி தேர்தல் ஆணையத்தின் அதிகாரிகளை நேரில் சந்தித்து கொடுத்திருக்கிறார். தேர்தல் ஆணையம் தீர்ப்பின்படி ஆவணம் செய்வதாக சொல்லி இருக்கிறார்கள். 2,501 பேர் தென்னரசுவிற்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்'' என்றார்.
அப்பொழுது செய்தியாளர் ஒருவரின், “அவைத்தலைவர் நேர்மையாக செயல்படவில்லை. இருந்தாலும், இரட்டை இலை முடக்கப்படக்கூடாது என்பதற்காகத்தான் நாங்கள் வேட்பாளர்களை திரும்பப் பெறுகிறோம் என ஓபிஎஸ் தரப்பு தெரிவித்துள்ளதே?” என்ற கேள்விக்கு, ''ஆடத் தெரியாதவனுக்கு மேடை சரியில்லை என்ற கதை எல்லாம் பேசிக் கொண்டிருப்பார்கள். அவர்கள் கதையெல்லாம் நாங்கள் பேச மாட்டோம்'' என்று சொல்லிவிட்டு கிளம்பினார்.