தமிழ்நாடு முழுக்க வரும் 19ஆம் தேதி நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடைபெறவுள்ளது. சில இடங்களில் அதிமுகவும், சில இடங்கிளில் திமுகவும் எதிர் வேட்பாளர்கள் இல்லாமல் அன்னபோஸ்டில் வெற்றி பெற்றுவருகின்றனர்.
இந்நிலையில், சட்டமன்ற உறுப்பினரும், ஊரக வளர்ச்சித் துறை அமைச்சருமான பெரியகருப்பனின் திருப்பத்தூர் சட்டமன்றத் தொகுதியில், மாற்றுக் கட்சி வேட்பாளருக்கு எதிராக கட்சியின் வேட்பாளரை களமிறக்காமல் அ.தி.மு.க.வினை அன்ன போஸ்டாக வெற்றி பெற வைத்துள்ளனர் உள்ளூர் தி.மு.க.வினர். இது அமைச்சர் காதுக்கு செல்ல, கட்சியினர் மேல் கடுங்கொந்தளிப்பில் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
சிவகங்கை மாவட்டம், திருப்புத்தூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்டது சாக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்தை சேர்ந்த 15 வார்டுகளைக் கொண்ட பள்ளத்தூர் பேரூராட்சி. இதிலுள்ள 8வது வார்டு கவுன்சிலருக்கான வேட்பாளரில் அ.தி.மு.க. சார்பில் களமிறங்கினார் தெய்வானை என்பவர். ஆனால் வேட்பு மனுத் தாக்கலின் இறுதி நாள்வரை தி.மு.க. சார்பில் யாரும் வேட்பு மனுத் தாக்கல் செய்யவில்லை.
அதே வேளையில், நீங்கள் அங்கு போட்டியிடவில்லை என்றால், இட பங்கீட்டு அடிப்படையிலாவது எங்களுக்கு இந்த வார்டை ஒதுக்குங்கள் என அமைச்சர் பெரியகருப்பனை காங்கிரசார் அணுக, அவர் ஏனோ, இதனை பெரிதாக கண்டுகொள்ளவில்லை. பள்ளத்தூர் பேரூராட்சியின் நகர அ.தி.மு.க. செயலாளர் மாணிக்கம், உள்ளூர் தி.மு.க.வினரிடம் பேசி முடிக்க, போட்டியில்லாமல் அங்கு அ.தி.மு.க. வென்றுவிட்டது.
அ.தி.மு.க.வினரின் முதல் வெற்றி என அ.தி.மு.க. ஆடிப் பாடிய வேளையில், இது தகவலாக அமைச்சரிடம் சென்றுள்ளது. "ஏய்...! அங்க நம்ம கட்சி சார்பாக ஆளை நிறுத்தலையேங்கின்றதை மறைச்சிட்டீங்களே? தேர்தல் முடியட்டும், அத்தனை பேருக்கும் ஆப்பு ரெடி'' என அமைச்சர் கொந்தளிக்க.. கட்சித் தலைமை வரை சென்றுள்ளது இந்த விவகாரம்.