தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான பிரச்சாரம் சூடுபிடித்துள்ளது. அ.தி.மு.க., தி.மு.க., மக்கள் நீதி மய்யம், நாம் தமிழர் கட்சி, அ.ம.மு.க., பா.ஜ.க., காங்கிரஸ், பா.ம.க. உள்ளிட்ட கட்சிகளின் தலைவர்கள் தங்கள் கட்சியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் மற்றும் கூட்டணியின் கட்சிகளின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
அந்த வகையில், தென்காசி மாவட்டம் சங்கரன் கோவில் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளரும், தற்போதைய தமிழக ஆதி திராவிடர் நலத்துறை அமைச்சருமான ராஜலட்சுமி இன்று (21/03/2021) தனது தொகுதிக்குட்பட்ட மேலநீலிதநல்லூர் ஒன்றியத்தை அடுத்த வல்லராமபுரத்தில் கட்சியின் தொண்டர்களுடன் இணைந்து வாக்குச் சேகரிக்க சென்ற அவர்களை, ஊருக்குள் வரக்கூடாது என முக்குலத்தோர் அமைப்பைச் சேர்ந்த பொதுமக்கள் ஊருக்கு வெளியே தடுத்து நிறுத்தனர். இதனால் பொதுமக்களுக்கும், அ.தி.மு.க.வினருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இது குறித்து தகவலறிந்து வந்த காவல்துறையினர் இரு தரப்பினரையும் சமரசம் செய்து, பின்னர் அமைச்சரின் பிரச்சார வாகனத்தைப் பாதுகாப்பாக அனுப்பி வைத்தனர். இதன் காரணமாக அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.
சீர் மரபினர் இட ஒதுக்கீட்டில் அ.தி.மு.க. அரசு ஒருதலைப்பட்சமாக செயல்பட்டதாகக் கூறி தென் மாவட்டங்களில் முக்குலத்தோர் அமைப்புகள் தங்கள் எதிர்ப்பைத் தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக, தூத்துக்குடி, நெல்லை, தென்காசி உள்ளிட்ட மாவட்டங்களில் 100-க்கும் மேற்பட்ட கிராமங்களில் கருப்புக்கொடியை ஏந்தியும், ஆர்ப்பாட்டங்களை நடத்தியும் தங்களது எதிர்ப்பைப் பதிவு செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.