நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது. மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.
அந்த வகையில், தி.மு.க, அ.தி.மு.க., காங்கிரஸ், தேமு.தி.க., பா.ம.க., பா.ஜ.க. உட்படப் பல்வேறு கட்சிகள் தேர்தல் கூட்டணி, தொகுதிப் பங்கீடுகள் முடிவடைந்து வேட்பாளர்கள் அறிவிப்பு, தேர்தல் பிரச்சாரம், வேட்பு மனுத்தாக்கல் உள்ளிட்ட தேர்தல் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில் தூத்துக்குடி மற்றும் ராமநாதபுரம் மக்களவை தொகுதிகளுக்கான தி.மு.க. மற்றும் அதன் கூட்டணியின் வேட்பாளார்களை ஆதரித்து தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள எட்டையபுரத்தில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பரப்புரை இன்று (26.12.2024) மேற்கொண்டார்.
முன்னதாக தூத்துக்குடி தி.மு.க. வேட்பாளரும், தி.மு.க. துணைப் பொதுச செயலாளருமான கனிமொழி எம்.பி. பேசுகையில், “சில மாதங்களுக்கு முன்னர் திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மாவட்டத்தின் கரிசல் பூமி கண்ணீரில் தவித்துக் கொண்டிருந்தபோது மத்திய அரசு கைகட்டி பார்த்துக் கொண்டிருந்தது. ஆனால் நான் இருக்கிறேன் என கருணையோடு ஓடி வந்தது முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தான். முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் எந்த பகுதியில் இருந்தாலும் நிவாரணம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கியது முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் மட்டும் தான். இந்திய சரித்திரத்திலேயே இல்லாத அளவிற்கு வீடு இடிந்தவர்களுக்கு 4 லட்ச ரூபாயை தி.மு.க. அரசு.
பாதிக்கப்பட்ட அனைவருக்கும் உதவிக்கரம் நீட்டுவது முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தான். ஆனால் இங்கு ஓட்டு கேட்க மட்டுமே வந்து கொண்டிருக்கிற பிரதமர் நிவாரண நிதியையும் கொடுப்பதில்லை. மாநிலத்திற்கு கொடுக்க வேண்டிய நிதியையும் கொடுப்பதில்லை. நம்மிடம் ஒரு ரூபாயை வரியாக வாங்கினால் 26 காசுகளை மட்டுமே கொடுக்கின்றனர். ஆனால் உத்தரப்பிரதேசத்திற்கு 2 ரூபாய் 2 காசுகள் என இருமடங்காக கொடுக்கின்றனர். இப்படி தமிழ்நாட்டை வஞ்சித்துக் கொண்டிருக்கிற, ஓர வஞ்சனை செய்துகொண்டிருக்க கூடிய பா.ஜ.க.வோடு இத்தனை ஆண்டுகளாக எடுத்த மக்கள் விரோத, சிறுபான்மையினருக்கு விரோதமான, விவசாயிகளுக்கு விரோதமான அத்தனை சட்டங்களையும் ஆதரித்து வாக்களித்தது அ.தி.மு.க.. ஆனால் இன்று பிரிந்துவிட்டோம் என்று நாடகமாடிக் கொண்டிருக்க கூடிய அ.தி.மு.க. உள்ளிட்ட இரண்டு கட்சிகளுக்கு நல்ல பாடத்தை சொல்லித் தர கூடிய தேர்தல் இது” எனப் பேசினார்.