
அண்மையில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை ஜெயலலிதா குறித்து தவறாக பேசியதாக அதிமுக முன்னாள் அமைச்சர்கள் தங்களது எதிர்ப்புகளை தெரிவித்து வந்தனர். நடந்து முடிந்த அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் அண்ணாமலைக்கு எதிராக தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது.
குறிப்பாக முன்னாள் அமைச்சர்கள் ஜெயக்குமார், சி.வி.சண்முகம், செல்லூர் ராஜு ஆகியோர் அண்ணாமலைக்கு எதிராக கருத்து தெரிவித்தனர். அதோடு மட்டுமல்லாமல் ஜெயக்குமார் அதிமுக, பாஜக கூட்டணி குறித்து மறுபரிசீலனை செய்யவும் வாய்ப்பு உள்ளது என்று தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் திருவள்ளூர் மாவட்டம் பூவிருந்தவல்லியில் கட்சி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசுகையில், ''ஜெயலலிதாவை அண்ணாமலை அவ்வளவு கடுமையாக தாக்கி இருக்கிறார். எடப்பாடிக்கோ மற்றவர்களுக்கோ பல்வேறு பிரச்சனைகள் இருக்கலாம். ஆனால், அதிமுக தொண்டர்கள் ஜெயலலிதா, எம்.ஜி.ஆரை குறை சொன்னவர்களை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். எனவே, அவர்களுக்குள் கூட்டணி வருவது என்பதே முதலில் நடைமுறை சாத்தியமில்லை. வந்தாலும் அந்த கூட்டணி ஒர்க் அவுட் ஆகாது. வேலை செய்யமாட்டார்கள். அவர்கள் 25 தொகுதிகள் அல்ல, 250 தொகுதிகளில் நின்றாலும் வெற்றிபெற மாட்டார்கள்'' என்றார்.