எல்லோருடைய கவனத்தையும் 12-ந் தேதி தன் பக்கம் திருப்பிய ரஜினி, தமிழகத்தில் அரசியல் எழுச்சி வரட்டும். அது வரை காத்திருக்கிறேன்னு அறிவித்து, பல்வேறு விமர்சனங்களை அரசியல் வட்டாரங்களில் ஏற்படுத்தினார். அதேபோல் அவர் எந்த லீலா பேலஸ் ஓட்டலில் இந்த அறிவிப்பை வெளியிட்டாரோ, அதே ஓட்டலில் தன் "மாஸ்டர்' பட ஆடியோ லாஞ்சை நடத்தும் ஆயத்தத்தில் இருந்த நடிகர் விஜய் வீட்டில்... அதே நேரத்தில் ரெய்டு நடத்தப்பட்டிருக்கிறது என்கின்றனர்.
ஏற்கனவே கடந்த மாதம் 6-ந் தேதி நடிகர் விஜய்யைக் குறிவைத்து, அவர் வீட்டிலும் மதுரை ஃபைனான்ஸியர் அன்புச்செழியன் வீட்டிலும், தயாரிப்பாளர் கல்பாத்தி அகோரம் அலுவலகத்திலும் ரெய்டுகள் நடத்தப்பட்டன. அப்போது அன்புச்செழியன் வீட்டில் மட்டும் 77 கோடி ரூபாய் அளவுக்குக் கறுப்புப் பணம் பிடிபட்டது. அது தமிழக அரசியல் மேலிடங்களின் பணம் என்பதால் பெரிதாக எந்த நடவடிக்கையும் இல்லை. விஜய் வீட்டில், அவர் வாங்கிய ஊதியத்துக்கெல்லாம் உரிய கணக்கை சரியாக வைத்துள்ளார். அப்போது அங்கிருந்து அபவுட்டர்ன் ஆன வருமான வரித்துறை அதிகாரிகள், மறுபடியும் 12-ந் தேதி விஜய் வீட்டில் ஆய்வு நடத்தினர்.
மேலும் முதலில் விஜய் நடித்த "பிகில்' படத்தைக் குறிவைத்தவர்கள். தற்போது அவரோட "மாஸ்டர்' படத்தைக் குறிவைத்திருப்பது பெரும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. அதோடு, நடிகர் ரஜினி மீது போட்ட வருமானவரித்துறை வழக்கை, தானாக அந்தத் துறை அதிகாரிகளே வாபஸ் வாங்கி விட்டார்கள். காரணம், அவர் தேசிய சட்டத் திருத்த மசோ தாவுக்கு ஆதரவாகக் குரல் கொடுத்து டெல்லியின் மனசைக் குளிரவைத்தார் என்கின்றனர். இது போன்ற எந்த முயற்சியையும் விஜய் மேற்கொள்ளவில்லை. அவருக்கு சிறு பான்மை மக்கள் மத்தியில் இருக்கும் இமேஜும், இளைஞர்கள் மத்தியில் இருக்கும் பலமான ஆதரவும் பா.ஜ.க.வின் கண்ணை உறுத்துவதாக சொல்லப்படுகிறது. சிறுபான்மைச் சமூகத்தைச் சேர்ந்த அவர், காங்கிரஸோடு தொடர்பில் இருப்பதாகவும் டெல்லிக்குத் தகவல் போயிருப்பதாக சொல்லப்படுகிறது. ஒருவேளை சட்ட மன்றத் தேர்தல் நேரத்தில் அவர் காங்கிரஸுக்கு ஆதரவாகவோ, அதன் கூட்டணித் தலைமையான தி.மு.க.வுக்கு ஆதரவாகவோ குரல்கொடுத்தால் என்ன பண்றது என்று நினைத்து தான், முன்னதாகவே அவரை டெல்லி முடக்கிவைக்க நினைப்பதாக சொல்லப்படுகிறது.
மேலும் மாஸ்டர் படத்தின் இணைத் தயாரிப்பாளரான லலித் ஜெயின் வீட்டில் முதல்நாள் ரெய்டை நடத்திவிட்டு, மறுநாள் விஜய்யின் பனையூர் வீட்டை ஆய்வு செய்தார்கள். வருமான வரித்துறை அதிகாரிகளோ, "மாஸ்டர்' படத்தின் இணைத் தயாரிப்பாளர் என்பதால் அவரை சோதனை செய்தோம். விஜய் வீட்டில் ரெய்டு நடத்தியது, ஒரு வெரிபிகேஷனுக்காகத்தான் என்று சொல்கிறார்கள். விஜய் மட்டும் மாஸ்டர் ஆடியோ ரிலீஸில், குடியுரிமை சட்ட மசோதாவையும், தேசிய குடிமக்கள் பதிவேட்டையும் ஆதரித்து பேசட்டும். நிலவரம் மாறி விடும் என்று பேசுகின்றனர்.