கும்பகோணம் அருகே அதிமுக வேட்பாளர் ஆசைமணியின் பிரசார வேனுடன் சென்ற மற்றொரு வாகனம் திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
மயிலாடுதுறை பாராளுமன்ற தொகுதியின் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் ஆசைமணி. திருவிடைமருதூர் தொகுதிக்கு உட்பட்ட திருப்பனந்தாள், பந்தநல்லூர் குறிச்சி மரத்துறை, காமாட்சிபுரம், வேட்டமங்கலம் உள்ளிட்ட கிராமங்களில் வாகனங்களில் சென்று வாக்கு சேகரித்தார்.
பிரச்சாரத்தில் கைத்தறித்துறை அமைச்சர் ஓ.எஸ் மணியன் பாராளுமன்ற உறுப்பினர் பாரதிமோகன் உள்ளிட்ட கூட்டணிக் கட்சியினரும் கலந்து கொண்டனர்.
இருசக்கர, நான்கு சக்கர வாகனத்தில் கூட்டணி கட்சிகள் கொடிகளை கட்டி கொண்டு ஊர்வலமாக வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர். அப்போது திருப்பனந்தாள் அருகே கதிராமங்கலம் பகுதிக்கு சென்று கொண்டிருந்தபோது மயிலாடுதுறை நாடாளுமன்றத் தொகுதியின் அதிமுக வேட்பாளர் ஆசைமணியின் வாகனத்திற்கு முன்னால் சென்ற அறிவிப்பு வாகனத்தில் ரேடியேட்டர் பழுதாகி தீப்பிடித்து புகைமண்டலமானது. அதனை தொடர்ந்து அந்த வாகனம் தீ பற்றி எரிய தொடங்கியது. உடனடியாக வாகனத்தில் இருந்தவர்கள் வெளியே குதித்து உயிர் தப்பினர். அப்பகுதி மக்கள் தண்ணீர் ஊற்றி தீயை அணைத்தனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரப்பு நிலவியது.
வேட்பாளர் வாக்கு சேகரிக்க வருவதற்கு முன்னதாக அங்கிருந்த பொதுமக்கள் மத்தியில், ‘கதிராமங்கலத்தில் ஹைட்ரோகார்பன் மீத்தேனுக்கு எதிரா வருஷக்கணக்கா போராடினோம் அப்ப எல்லாம் இந்த எம்.பி வரல, இப்ப ஓட்டு கேட்க மட்டும் வர்ராரு’ என்று சலசலப்பு இருந்தது.