இந்த ஆண்டு நடைபெறவிருக்கிற நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க. ஆட்சியை வீழ்த்துவதற்கு எதிர்க்கட்சிகள் சார்பில் பீகார் முதல்வர் நிதிஷ்குமாரின் ஜனதா தளம், திமுக, காங்கிரஸ், சமாஜ்வாதி, திரிணாமுல் காங்கிரஸ் உட்பட 25க்கும் மேற்பட்ட கட்சிகள் ஒன்றிணைந்து இந்தியா என்ற கூட்டணியை உருவாக்கித் தங்களது ஆதரவைப் பெருக்கி வருகின்றனர்.
அந்த வகையில், பீகார் மாநிலம் பாட்னாவில் இந்தியா கூட்டணியின் முதல் கூட்டம் கடந்த ஜூன் மாதம் 23 ஆம் தேதி பீகார் முதல்வர் நிதிஷ்குமார் தலைமையில் நடைபெற்றது. இதையடுத்து, பெங்களூர், மும்பை என அடுத்தடுத்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து இந்தியா கூட்டணியின் 4வது ஆலோசனைக் கூட்டம் கடந்த டிசம்பர் 19 ஆம் தேதி டெல்லியில் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து இந்தியா கூட்டணியின் ஆலோசனைக் கூட்டம் கடந்த 13 ஆம் தேதி காணொளி வாயிலாக நடைபெற்றது. இந்த கூட்டத்தில் 'இந்தியா' கூட்டணியின் ஒருங்கிணைப்பாளர் பொறுப்பை பீகார் மாநில முதல்வர் நிதிஷ் குமார் நிராகரித்திருந்தார். மேலும் இந்த கூட்டணியின் தலைவராக மல்லிகார்ஜுன கார்கே தேர்வு செய்யப்பட்டிருந்தார்.
இந்த சூழலில் நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி இல்லை என திரிணாமுல் காங்கிரஸ் அறிவித்திருந்தது. இது குறித்து மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கூறுகையில், "திரிணாமுல் காங்கிரஸ், காங்கிரஸ் கட்சியுடன் எந்த பேச்சுவார்த்தையும் நடத்தவில்லை. நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் தனித்து போட்டியிடுவோம் என்று நான் முன்பிருந்தே கூறி வருகிறேன். மக்களவை தேர்தலில் மேற்கு வங்கத்தில் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி இல்லை. இங்கு பா.ஜ.க.வை தனித்து நின்று தோற்கடிப்போம். திரிணாமுல் காங்கிரஸ் கட்சி இந்தியா கூட்டணியில் ஒரு அங்கமாக உள்ளது. ராகுல் காந்தியின் நடைப்பயணம் எங்கள் மாநிலம் வழியாக செல்கிறது. ஆனால் அதுபற்றி எங்களுக்கு எதுவும் தெரிவிக்கப்படவில்லை. ஒரு மரியாதைக்காகவாவது ‘நான் வருகிறேன் சகோதரி’ என அவர் கூறியிருக்க வேண்டும்” எனத் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் பஞ்சாப் மாநில முதலமைச்சர் பகவந்த் மான் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜி தனித்துப் போட்டியிடுவது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர், “நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் பஞ்சாப் மாநிலத்தில் உள்ள 13 மக்களவைத் தொகுதிகளிலும் ஆம் ஆத்மி கட்சி தனித்துப் போட்டியிடும். காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி கிடையாது” எனத் தெரிவித்துள்ளார்.