மத்திய நிதியமைச்சர் தலைமையில் 49 ஆவது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் நடைபெற்றது. இதில் தமிழ்நாடு நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கலந்து கொண்டார்.
ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்தில் கலந்து கொண்ட பிறகு அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “2020-2021, 2021-2022க்கான பாக்கிகள் இதுவரை தணிக்கை அறிக்கைக்காக காத்திருந்தது. அதை கொடுப்பதா, இல்லையா? என்று விவாதிக்கப்பட்டு வந்த நிலையில், இன்று காலை மத்திய நிதி அமைச்சர் தணிக்கை அறிக்கை வந்ததற்கு தேவையான நிதி அனுப்பப்பட்டுள்ளது எனக் கூறியுள்ளார்.
அந்த அடிப்படையில் 2020-2021க்கு தணிக்கை அறிக்கையின் படி ரூபாய் 4230 கோடி வெளியிடப்பட்டுள்ளது. 2021-2022க்கு இன்னும் சில காலம் ஆகும். இன்று மிக முக்கியமான ஒரு தலைப்பு, ஜிஎஸ்டி குறித்தான தீர்ப்பாயம் மாநில அளவில் இருக்குமா? ஒன்றிய அளவில் இருக்குமா? அதில் யார் உறுப்பினர்களாக இருக்க வேண்டும்? எந்த தேர்வுக்குழு இருக்க வேண்டும் என்ற நீண்ட விவாதம் வந்தது. அதற்கு மத்திய அரசு ஒரு அறிக்கை சமர்ப்பித்தது.
அந்த அறிக்கைக்கு 13 மாநிலங்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. மாநிலங்களின் உரிமையைப் பாதுகாக்கும் வகையிலும், உறுப்பினர்களின் நியமனத்தில் மாநிலங்களுக்கு கூடுதல் பங்கு வேண்டும் என்ற காரணத்திற்காகவும் குழுவின் அறிக்கையினை ஏற்கவில்லை. அதனால் இரண்டு மூன்று மணி நேரம் விவாதம் நடந்து பல திருத்தங்கள் சொல்லி அதை அனைவரும் ஏற்றுக்கொண்டு கிட்டத்தட்ட நிறைவுக்கு வரும் சூழலில் நிறுத்தப்பட்டுள்ளது. இன்னும் சில தகவல்களுக்கு ஒப்புதல் பெறவில்லை. அதனால் அதை எல்லாம் எழுதி அனுப்பி எங்கள் ஒப்புதலைப் பெறுவதாக கூறியுள்ளார்கள். அது இன்னும் சில தினங்களில் நடக்கும். இது மிக முக்கியமான முன்னேற்றம்.
ஸ்லோகன்களை வைத்து அரசியல் செய்வது மிகச் சுலபம். அதை செயல்படுத்துவது மிகக் கடினம். ஹரியானாவின் துணை முதல்வர் என் வீட்டிற்கு வந்திருந்தார். அப்போது ஒரே நாடு, ஒரே வரி, ஒரே தீர்ப்பாயம் எனக் கூறினார். அதற்கு ஒரே நாடு ஒரே வரி என்பதற்கு ஒரு தீர்ப்பாயம் இருக்க வேண்டும் எனச் சொன்னால், ஒரே நாடு ஒரே சட்ட அமைப்பில் ஏன் இத்தனை நீதிமன்றங்கள் இருக்கிறது. வணிக வரி சட்டங்களை நாங்கள் ஏன் மீண்டும் மீண்டும் மாற்றுகிறோம். அதனால் இம்மாதிரியான ஸ்லோகன்களை வைத்து பேசுவது அரசியலுக்கு சரிப்படும். ஆனால், செயல்பாட்டுக்கு சரிப்படாது” எனக் கூறினார்.