ராஜஸ்தான் உட்பட ஐந்து மாநிலத்திற்கு இந்த வருட இறுதியில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவிருக்கிறது. இதற்காக அனைத்து கட்சிகளும் தீவிரமாக களப்பணி செய்துவருகிறது. இந்நிலையில் ராஜஸ்தான் மாநிலம், ஜெய்ப்பூரில் இன்று காங்கிரஸ் கட்சியின் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் அக்கட்சியின் முன்னாள் தலைவரும், எம்.பி.யுமான ராகுல் காந்தி கலந்துகொண்டு பேசினார்.
இந்தப் பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், “பெண்கள் இட ஒதுக்கீடு பற்றி அவர்கள் முதலில் பேச திட்டமிடவில்லை. இந்தியா; பாரத் குறித்து விவாதிக்கவே சிறப்பு நாடாளுமன்றக் கூட்டத்தொடர் கூட்டப்பட்டது. ஆனால், மக்கள் இந்த விவகாரத்தை ஏற்றுக்கொள்ளவில்லை. ஆனால், சிறப்புக் கூட்டத்தொடரை அறிவித்து விட்டதால் அவர்கள் அச்சமடைந்து விட்டனர். அதன் காரணமாக பெண்கள் இட ஒதுக்கீடு மசோதாவை கொண்டுவந்தார்கள். நாம் பெண்கள் இட ஒதுக்கீடு மசோதாவை ஆதரிக்கிறோம்.
மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் தொகுதி மறுவரையறை முடிந்த பிறகு 33% பெண்கள் இட ஒதுக்கீட்டை நடைமுறைக்கு கொண்டுவர முடியும் என பா.ஜ.க. தெரிவித்திருக்கிறது. ஆனால், 33% பெண்கள் இட ஒதுக்கீட்டை தற்போதே நடைமுறைப்படுத்தலாம். பா.ஜ.க. இதற்கு 10 வருடங்கள் காலதாமதம் செய்கிறது. நமக்கு ஒ.பி.சி. பெண்களும் இதில் பயன்பெற வேண்டும்” என்று தெரிவித்தார்.