2024 நாடாளுமன்றத் தேர்தலை சந்திக்க எதிர்க்கட்சிகளை ஓரணியாக ஒன்று திரட்டும் பணியில் பீகார் முதல்வர் நிதீஷ்குமார் ஈடுபட்டுள்ளார்.
பாஜகவை விட குறைவான இடங்களில் நிதீஷ்குமார் கட்சி வெற்றி பெற்றாலும் பாஜகவின் கூட்டணி தயவால் பீகாரின் முதல்வராக செயல்பட்டார். எனினும் சில தினங்கள் முன்பு அந்த கூட்டணியில் இருந்து விலகி ராஷ்டிரிய ஜனதா கட்சியுடன் இணைந்தார். இதனால் பாஜக கூட்டணியை விட அதிக இடங்கள் பெற்ற அணி என்று நிதீஷ்குமார்-ராஷ்டிரிய ஜனதா கூட்டணி ஆனது. இதனால் மீண்டும் பீகாரின் முதல்வராக நிதீஷ்குமார் பொறுப்பேற்றார். பீகாரின் துணை முதல்வராக தேஜஸ்வி யாதவ் பொறுப்பேற்றார்.
இந்நிலையில் 2024ம் ஆண்டுக்கான நாடாளுமன்றத் தேர்தலை சந்திக்க எதிரணியை ஒரு குடையின் கீழ் திரட்டும் பொருட்டு ஒவ்வொரு மாநிலத்திலும் பாஜகவிற்கு எதிரான கட்சித் தலைவர்களை சந்தித்து பேசிவருகிறார். அந்த வகையில் டெல்லியில் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பொதுத்தலைவர் சீதாராம் யெச்சூரி, இந்திய கம்யூனிஸ்ட் பொதுச்செயலாளர் டி.ராஜா மற்றும் சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் யாதவை சந்தித்து ஆலோசனை நடத்தினார்.
அப்போது டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த அவர் "நாட்டை கைப்பற்ற பாஜக திட்டமிடுகிறது. அனைத்து கட்சிகளும் ஓரணியில் திரண்டால் நாட்டின் அரசியல் சூழல் மாறும்.பிரதமர் வேட்பாளராக நான் ஆசைப்படவில்லை. எதிர்க்கட்சிகளை ஓரணியில் திரட்டவே விரும்புகிறேன். அனைவரும் ஒற்றுமையாக இருந்தால் சூழல் நிச்சயம் மாறிவிடும். இதில் எனக்கு தனிப்பட்ட விருப்பம் ஏதும் இல்லை. முதலில் எதிர்க்கட்சிகளை ஓரணியில் திரட்ட வேண்டும். பிறகு பிரதமர் வேட்பாளரை முடிவு செய்யலாம்." எனக் கூறினார்.
மேலும் தெலுங்கானா முதல்வர் சந்திரசேகரராவும் எதிர்க்கட்சிகளை ஒன்றிணைப்பதில் தீவிரம் காட்டுகிறார். இதற்கு முன் சந்திரசேகர ராவ் நிதீஷ்குமாரை சந்தித்ததும் பின் செய்தியாளர்களிடம் "பாஜக இல்லாதா இந்தியாவை உருவாக்க வேண்டும்" என்று கூறியதும் குறிப்பிடத்தக்கது.