ஆந்திர மாநிலத்தில் சட்டமன்றம், நாடாளுமன்ற தேர்தல் என இரண்டிலும் சந்திரபாபு நாயுடு தலைமையிலான தெலுங்கு தேசம் கட்சி மிகப்பெரிய தோல்வியை சந்தித்துள்ளது. சட்டப்பேரவையில் மொத்தம் உள்ள 174 தொகுதிகளில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி 151 இடங்களில் வெற்றி பெற்றது. தெலுங்கு தேசம் கட்சி 23 இடங்களில் மட்டுமே வென்றது. அதுபோல 25 மக்களவைத் தொகுதிகளில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி 23 தொகுதிகளைக் கைப்பற்றியது. இந்நிலையில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியில் நின்று வெற்றி பெற்ற வேட்பாளர் கோடலி நானி, சந்திரபாபு நாயுடுவை கடுமையாக விமர்சித்துள்ளார்.
சந்திரபாபு நாயுடு குறித்து நானி, "இப்போது எங்கள் கட்சி ஆட்சிக்கு வந்துள்ளதால் எதிர்க்கட்சி நிலைக்கு வர பாஜக முயற்சித்து வருகிறது. ஏனென்றால் அவர்களின் அடுத்த இலக்கு ஆந்திர மாநிலம்தான். சந்திரபாபு நாயுடு, தெலுங்கு தேசம் கட்சியை வீணாக்கிவிட்டார். இன்னும் இரண்டு வருடங்கள் இப்படியே காத்திருந்தால், மொத்த கட்சியுமே காணாமல் போகும். அதற்குள் தெலுங்கு தேசம் கட்சி நிறுவனர் என்.டி.ஆரின் குடும்பத்திலிருந்து யாரவது ஒருவர் கட்சியை கைப்பற்ற வேண்டும்.
திரைத்துறையில் தற்போது உச்சத்தில் இருக்கக்கூடிய ஜூனியர் என்.டி.ஆர் இந்த கட்சிக்கு தலைமை ஏற்க வேண்டும். அப்போது தான் தெலுங்கு தேசம் வளர்ச்சி பெரும். ஜூனியர் என்.டி.ஆர் தற்போது நன்றாகப் போய்க்கொண்டிருக்கும் தனது சினிமா வாழ்க்கையில் கவனம் செலுத்தி வரலாம். ஆனால் இன்னும் சில ஆண்டுகளில் அவர் வர வேண்டும், இல்லையெனில் தெலுங்கு தேசம் கட்சி காணாமல் போய்விடும்" என தெரிவித்தார்.
அவரது இந்த பேச்சு ஜூனியர் என்.டி.ஆர் ரசிகர்கள் மத்தியிலும், அரசியல்வாதிகள் மற்றும் தெலுங்குதேசம் கட்சியினர் மத்தியிலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.