Skip to main content

‘பவன் கல்யாண் வெற்றி பெற்றால்...’ - விட்ட சவாலை காப்பாற்றிய ஓய்.எஸ்.ஆர் காங்கிரஸ் தலைவர்

Published on 21/06/2024 | Edited on 21/06/2024
YSR Congress leader kept his word on If Pawan Kalyan wins

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலோடு ஒடிசா, ஆந்திரப் பிரதேசம், சிக்கிம், அருணாச்சலப் பிரதேசம் போன்ற மாநிலங்களில் சட்டமன்றத் தேர்தலும் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் ஆட்சியில் இருந்த ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் ஆட்சியைக் கவிழ்த்து தெலுங்கு தேசம் கூட்டணி அபார வெற்றி பெற்றிருந்தது. 175 தொகுதிகள் கொண்ட ஆந்திராவில், தெலுங்கு தேசம் கட்சி 135 இடங்களிலும், அதன் கூட்டணி கட்சிகளான ஜன சேனா கட்சி 21 இடங்களிலும், பா.ஜ.க 8 இடங்களிலும்  வெற்றி பெற்றது.  

அந்த வகையில் சட்டமன்றத் தேர்தலில் சந்திரபாபு நாயுடு ஆந்திர முதல்வராக கடந்த 12ஆம் தேதி பதவியேற்றுக் கொண்டார். இதனையடுத்து, ஆந்திர அமைச்சர்களுக்கு இலாகாக்கள் ஒதுக்கப்பட்டன. அதன்படி முதல்வர் சந்திரபாபு நாயுடுவுக்குச் சட்டம் மற்றும் ஒழுங்கு, பொது நிறுவனங்கள் மற்றும் அமைச்சர்களுக்கு ஒதுக்கப்படாத அனைத்து துறைகளும் ஒதுக்கீடு செய்யப்பட்டன. ஜன சேனா கட்சியின் தலைவரும், நடிகருமான பவன் கல்யாண் துணை முதல்வராக பதவியேற்றுக் கொண்டார். 

முன்னதாக, ஆந்திரப் பிரதேச தேர்தலின் பிரச்சாரத்தின் போது, பவன் கல்யாண் தேர்தலில் வெற்றி பெற்றால் எனது பெயரை முத்ரகடா பத்ம்நாயம் என்பதற்கு பதிலாக முத்ரகடா பத்மநாப ரெட்டி என மாற்றிக் கொள்கிறேன் என ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் முத்ரகடா பத்மநாபம் பேசியிருந்தார். தற்போது ஜன சேனா தலைவரும், நடிகருமான பவன் கல்யாண் போட்டியிட்ட இடங்களில் அதிகபெரும்பான்மையாக வெற்றி பெற்று அம்மாநில துணை முதல்வராக பதவியேற்றுள்ளார்.

இந்த நிலையில், ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் மூத்த தலைவர் முத்ரகடா பத்மநாபம் தனது பெயரை அதிகாரப்பூர்வமான ‘முத்ரகடா பத்மநாப ரெட்டி’ என மாற்றிக்கொண்டுள்ளார். இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், “என் பெயரை மாற்றும்படி யாரும் என்னை வற்புறுத்தவில்லை. என் சொந்த விருப்பத்தில் மாற்றிவிட்டேன். இருப்பினும், ஜனசேனா தலைவரின் ரசிகர்களும், ஆதரவாளர்களும் என்னிடம் தவறான முறையில் நடந்துக் கொள்கின்றனர். 

உங்களை (பவன் கல்யாண்) நேசிக்கும் இளைஞர்கள் தொடர்ந்து அவதூறான செய்திகளை விடுகிறார்கள். என் பார்வையில் இது சரியல்ல. துஷ்பிரயோகம் செய்வதை விட ஒரு காரியம் செய்யுங்கள். எங்கள் குடும்பத்தினர் அனைவரையும் ஒழித்துவிடுங்கள்” என்று கூறினார். 

சார்ந்த செய்திகள்