தெலுங்கானா சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவு அளிப்பதாக ஒய்.எஸ். ஷர்மிளா தெரிவித்துள்ளார்.
தெலுங்கானா மாநிலத்தில் வரும் நவம்பர் 30 ஆம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், தற்போது தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. ஆட்சியைக் கைப்பற்றும் நோக்கில் காங்கிரஸ், பாஜக மற்றும் சந்திரகேசர் ராவ் தலைமையிலான தெலுங்கானா ராஷ்டிர சமிதி ஆகிய கட்சிகள் படு தீவிரமாகச் செயல்பட்டு வருகின்றன. தெலுங்கானா தேர்தலில் மும்முனை போட்டி நிலவுவதால், அரசியல் கட்சித் தலைவர்கள் மாறி மாறி விமர்சனங்களையும் குற்றச்சாட்டுகளையும் முன்வைத்து வருகின்றனர். சந்திரசேகர ராவின் டி.ஆர்.எஸ் கட்சிக்கும் பாஜகவிற்கும் ஆகவே ஆகாது என்று கூறி வந்தாலும், பாஜகவின் பி டீம் டி.ஆர்.எஸ் கட்சி என்று பிரச்சாரத்திற்குச் செல்லும் வழியெங்கும் கூறி வருகிறது காங்கிரஸ்.
இந்த நிலையில், தெலுங்கானா சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவு அளிப்பதாக ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டியின் சகோதரியும், ஒய்.எஸ்.ஆர். தெலுங்கானா கட்சியின் தலைவருமான ஷர்மிளா தெரிவித்துள்ளார். கடந்த 2021 ஆம் ஆண்டு ஒய்.எஸ்.ஆர். தெலுங்கானா என்ற கட்சியைத் தொடங்கிய அவர், தனது கட்சி சட்டமன்றத் தேர்தலில் 119 தொகுதிகளில் போட்டியிடும் என அறிவித்திருந்தார். இந்த நிலையில், திடீரென போட்டியில் இருந்து விலகி காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவு அளிப்பதாகத் தெரிவித்துள்ளார். கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்திய ஷர்மிளா, ஆளும் டி.ஆர்.எஸ் கட்சியைத் தோற்கடிக்கவே தான் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவு அளிப்பதாகத் தெரிவித்துள்ளார்.