இரத்ததானம் செய்யவேண்டிய தேவையை வலியுறுத்தி இளைஞர் ஒருவர் 6ஆயிரம் கிலோ மீட்டர் தூரத்திற்கு நடைபயணம் மேற்கொண்டுள்ளார்.

ஸ்ரீநகரைச் சேர்ந்தவர் கிரண் வெர்மா (வயது 33). இவர் புற்றுநோயால் தனது தாயார் உயிரிழந்த நிலையில், இரத்ததானம் செய்யவேண்டியதன் அவசியத்தை உணர்ந்து சிம்ப்ளி பிளட் (Simply Blood) என்ற மெய்நிகர் ஆண்ட்ராய்டு செயலியை வடிவமைத்துள்ளார். மேலும், நாடு முழுவதும் இரத்ததானம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக, ஸ்ரீநகரில் தொடங்கி உதய்ப்பூர், வதோதரா, சென்னை மற்றும் பெங்களூரு உள்ளிட்ட பகுதிகள் வழியாக திருவனந்தபுரம் வரை கிட்டத்தட்ட 6 ஆயிரம் கிலோமீட்டர் தூரம் நடைபயணம் மேற்கொண்டுள்ளார். 2020ஆம் ஆண்டுக்குள் இரத்ததானத்தின் மூலமாக 10 லட்சம் உயிர்களைக் காப்பது மட்டுமே தனது இலக்கு எனக் கூறும் கிரண், இதற்காக தான் பார்த்துவந்த வேலையையும் விட்டுவிட்டார்.
இதுகுறித்து கிரண் வெர்மா பேசுகையில், ‘ஸ்ரீநகரின் லால் சவுக் பகுதியில் இருந்து ஜனவரி 26ஆம் தேதி நடக்கத் தொடங்கி தற்போது திருவனந்தபுரத்தை அடைந்துள்ளேன். இதுவரை 6 லட்சம் பொதுமக்களை சந்தித்து இரத்ததானம் குறித்து பேசியுள்ளேன். கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள், ரயில்நிலையங்கள் என அனைத்து பொது இடங்களிலும் என இலக்கு குறித்தும் நான் விளக்கியிருக்கிறேன்’ என தெரிவித்துள்ளார். மேலும், நாளொன்றுக்கு சரியான நேரத்தில் இரத்தம் கிடைக்காமல் 12ஆயிரம் பேர் உயிரிழக்கின்றனர். நம் நோக்கம் எல்லாம் ஒரு கிலோமீட்டருக்கு இடைப்பட்ட தூரத்தில் 10 பேரையாவது ‘வாழ்நாளில் ஒருமுறையாவது இரத்ததானம் செய்வேன்’ என உறுதிமொழி ஏற்கச்செய்வதுதான்’ என உறுதிபடப் பேசுகிறார்.
இவரது சிம்ப்ளி பிளட் செயலி சிறப்பாக செயல்பட்டு வருகிறது. கடந்த ஒரு ஆண்டில் மட்டும் 11அ நாடுகளைச் சேர்ந்த கிட்டத்தட்ட 2ஆயிரம் பேரின் உயிரைக் காப்பாற்ற அது பயன்பட்டது குறிப்பிடத்தக்கது.