நாங்க ஒரு வழக்கறிஞர் எப்படி வேணாலும் வருவோம். எப்படி வேணாலும் போவோம். அத கேட்க நீங்க யாரு? என மும்பை இரயிலில் பயணம் செய்த பத்திரிகையாளரிடம் திமிராகப் பேசிய இளம் பெண்னை நெட்டிசன்கள் வறுத்தெடுத்து வருகின்றனர்.
மகாராஷ்டிர மாநிலம் அருகே உள்ள மும்பை மாநகரத்தைச் சேர்ந்தவர் பிரசாந்த். பத்திரிகையாளரான இவர் கடந்த 2 ஆம் தேதியன்று மும்பை லோக்கல் ரயிலில் பயணம் செய்துகொண்டிருந்தார். அந்த சமயம் பிரசாந்த் ஏறிய ரயில் பெட்டியில் ஒரு ஆணும் பெண்ணும் ஜோடியாக ஏறியுள்ளனர். அப்போது பயணிகள் அமரும் இருக்கையில் அந்த பெண் தனது கால்களைத் தூக்கி மேலே வைத்தபடி பயணம் செய்துள்ளார்.
இதை பார்த்துக்கொண்டிருந்த பத்திரிகையாளர் பிரசாந்த் அந்தப் பெண்ணிடம், "சீட்ல கால் வெக்காதீங்க... தயவு செஞ்சி உங்க கால எடுங்க" எனப் பணிவோடு கூறியுள்ளார். ஆனால் இதை சிறிதும் கண்டுகொள்ளாத அந்தப் பயணிகள் பொது நாகரிகம் என்பது சிறிதும் இல்லாமல் அலட்டலான பதிலைக் கூறியுள்ளனர். இதனால் பத்திரிகையாளருக்கும் அந்த பயணிகளுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
ஒரு கட்டத்தில் விரக்தியடைந்த பத்திரிகையாளர், அந்த பெண் செய்யும் அட்டூழியத்தை தனது செல்போனில் வீடியோ எடுக்கத் தொடங்கியுள்ளார். இதனால் கோபமடைந்த அந்தப் பெண், இது என்னோட காலு... நா எங்க வேணாலும் வெப்பேன். நானும் காசு கொடுத்துதான் டிக்கெட் வாங்கி இருக்கேன். நீங்க இந்த வீடியோ எடுக்குற வேலைலாம் வெச்சிக்காதீங்க. நாங்கள் ஒரு வழக்கறிஞர் எப்படி வேணாலும் வருவோம். எப்படி வேணாலும் போவோம். அத கேட்க நீங்க யாரு? எனத் திமிராகப் பேசினார்.
அதற்கு அந்த பத்திரிகையாளர், "ஒரு வழக்கறிஞர் இப்படித்தான் பொது இடத்தில் பயணிகள் அமரும் இருக்கையில் கால் வெப்பாங்களா? எனக் கேட்டதற்கு, அந்தப் பெண் அவரது செல்போனை பிடுங்க வந்துள்ளார். இது குறித்த வீடியோவை அந்த பத்திரிகையாளர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதுமட்டுமின்றி மும்பை போலீசையும் ரயில்வே போலீசையும் டேக் செய்துள்ளார். மேலும், இந்த வீடியோவை பார்த்த இணையவாசிகள் இருவரையும் வறுத்தெடுத்து வருகின்றனர்.