உத்தரப்பிரதேச மாநிலம், வாரணாசியில் உள்ள பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில் இன்று (19/11/2022) மதியம் நடந்த காசி தமிழ்ச் சங்கமம் நிகழ்ச்சியைப் பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி தமிழ் பாரம்பரிய உடையான வேட்டி, சட்டை அணிந்திருந்தார். உத்தரப்பிரதேச மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், பா.ஜ.க.வின் தமிழ்நாடு மாநிலத் தலைவர் அண்ணாமலை, முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், மத்திய இணையமைச்சர் எல்.முருகன், இசையமைப்பாளர் இளையராஜா எம்.பி. உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்வில் கலந்து கொண்டு பேசிய உ.பி முதல்வர் யோகி ஆதித்யநாத், "தெற்கிலிருந்து வடக்கு வரை நமது ஒருமைப்பாட்டை நிரூபிக்கும் வண்ணம் இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. ராமேஸ்வரத்தில் ராமரால் நிர்மாணிக்கப்பட்ட ஜோதி லிங்கமும், காசியில் அமைந்துள்ள காசி விஸ்வநாத கோவிலில் உள்ள ஜோதி லிங்கமும் தமிழகத்திற்கும் காசிக்கும் உள்ள தொடர்பினை புலப்படுத்துகிறது. தமிழ் மொழி மிகவும் பழமையான மொழி. அதற்குப் பழங்கதை ஒன்று உள்ளது. இந்து கடவுளான சிவபெருமானின் வாயிலிருந்து இரண்டு மொழிகள் வந்தன அதில் ஒன்று தமிழ் மற்றொன்று சமஸ்கிருதம். அத்தகைய பழமை வாய்ந்த மொழி தமிழ்" எனத் தெரிவித்தார்.