உத்தரப்பிரதேசத்தில் ஏழு கட்டங்களாக சட்டமன்ற தேர்தல் நடைபெற்று வருகிறது. கடந்த 10 ஆம் தேதி அம்மாநிலத்தில் முதற்கட்ட வாக்குப்பதிவும், நேற்று முன்தினம் (பிப்ரவரி 14) இரண்டாம் கட்ட வாக்குப்பதிவும் நடைபெற்றது. மூன்றாம் கட்ட வாக்குப்பதிவு வரும் 20 ஆம் தேதி நடைபெறவுள்ளது.
இதனையொட்டி உத்தரப்பிரதேசத்தில் தீவிரமாக தேர்தல் பிரச்சாரம் நடைபெற்று வரும் நிலையில், ஹைதராபாத்தின் கோஷாமஹால் பாஜக எம்.எல்.ஏ. ராஜா சிங், உத்தரப்பிரதேசத்தில் பாஜகவிற்கு வாக்களிக்காதவர்கள், ஜேசிபிக்களையும், புல்டோசர்களையும் சந்திக்க நேரிடும் என எச்சரிக்கும் வீடியோ வெளியாகியுள்ளது.
அந்த வீடியோவில் எம்.எல்.ஏ ராஜா சிங், “உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், ஆயிரக்கணக்கான புல்டோசர்களையும், ஜேசிபிக்களையும் வாங்கி, அவற்றை திரட்டி வருகிறார்.ஜேசிபிக்களும், புல்டோசர்களும் எதற்காகப் பயன்படுத்தப்படுகின்றன என்பது உங்களுக்குத் தெரியும் என நம்புகிறேன். யோகி ஆதித்யநாத் மீண்டும் முதல்வராகத் தேர்ந்தெடுக்கப்படுவதை விரும்பாத துரோகிகளுக்கு நான் ஒரு விஷயத்தை தெரிவித்துக்கொள்கிறேன். உ.பியில் நீங்கள் இருக்க வேண்டுமென விரும்பினால், யோகி..யோகி என கோஷமிட வேண்டும். இல்லை என்றால் மாநிலத்தை விட்டு ஓட வேண்டியது வரும்” என தெரிவித்துள்ளார். பாஜக எம்.எல்.ஏ. வின் இந்த கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.