கலவரத்தால் பாதிக்கப்பட்ட உத்தரபிரதேசத்தை பார்க்கத்தான் எதிர்க்கட்சிகள் விரும்புகின்றன என உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்.
ஹத்ராஸில் 19 வயது இளம்பெண்ணை நான்கு பேர் சேர்ந்த கும்பல் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்து தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் பாதிக்கப்பட்ட பெண், இரண்டு வாரங்கள் உயிருக்கு போராடி டெல்லி மருத்துவமனையில் உயிரிழந்தார். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், இதனைத் தொடர்ந்து நடந்த அடுத்தடுத்த சம்பவங்களும் மிகப்பெரிய சர்ச்சைகளாக வெடித்துள்ளன.
இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து பேசியுள்ள அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத், "எதிர்க்கட்சியினர் நமக்கு எதிராக சதி செய்கிறார்கள். சர்வதேச நிதியுதவி மூலம் சாதி மற்றும் வகுப்புவாத கலவரங்களுக்கு அடித்தளமிட்டு கடந்த ஒரு வாரமாக, எதிர்க்கட்சிகள் கலவரங்களைக் காண ஆர்வமாக இருந்தன. இந்த சதிகளுக்கிடையில் நாம் முன்னேற வேண்டும்.
பாஜக தொண்டர்கள் நாட்டின் வளர்ச்சிக்காக தங்களை அர்ப்பணிக்க வேண்டும். கலவரத்தால் பாதிக்கப்பட்ட உத்தரபிரதேசத்தைதான் அவர்கள் எப்போதும் விரும்புகின்றனர். எனவே, சமூக விரோத மற்றும் தேச விரோத சக்திகள் மாநிலத்தின் வளர்ச்சியை ஏற்றுக்கொள்வது கடினம். எனவே அவர்கள் இப்போது சதித்திட்டங்களைக் கட்டவிழ்த்துள்ளனர்" எனத் தெரிவித்துள்ளார்.