பாஜக மூத்த தலைவர் எடியூரப்பா கர்நாடக முதல்வராக இருந்தபோது பாஜக வின் தேசிய தலைவர்களுக்கு ரூ. 1,800 கோடி கொடுத்ததாக காங்கிரஸ் கட்சி புகார் கூறியுள்ளது. வருமான வரித்துறையிடம் உள்ள அவரது டைரியில் உள்ள குறிப்புகளை கொண்டு காங்கிரஸ் கட்சி தற்போது இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளது.
அந்த டைரியில் ராஜ்நாத் சிங், நிதின் கட்கரி, அருண் ஜெட்லி உள்ளிட்ட தலைவர்களின் பெயரும் உள்ளதாக காங்கிரஸ் கட்சி அறிவித்தது. இதற்கு தற்போது பதிலளித்துள்ள எடியூரப்பா, “இது அனைத்தும் காங்கிரஸ் தலைவர்களின் திவாலான ஐடியாக்கள்தான்,” என பதிலளித்துள்ளார்.
மேலும் பேசிய அவர், "மோடியின் புகழ் அதிகரித்து வருவதால் காங்கிரஸ் கட்சி விரக்தியில் இவாறு செய்துள்ளது. இப்போதே அவர்கள் தோல்வியை தழுவிவிட்டனர். அவர்கள் காட்டிய ஆவணங்கள் அனைத்தும் போலியானது என வருமான வரித்துறையினர் ஏற்கனவே நிரூபித்துவிட்டனர். இவ்விவகாரத்தில் தொடர்புடையவர்களுக்கு எதிராக அவதூறு வழக்கும் பதிவு செய்வேன்" என கூறினார்.