மொத்தம் 33 சட்டமன்ற உறுப்பினர்களைக் கொண்டது புதுச்சேரி மாநில சட்டப்பேரவை. இதில் மூன்று உறுப்பினர்கள் நியமன உறுப்பினர்கள் ஆவர். புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி தலைமையிலான காங்கிரஸ் கட்சி, ஆட்சி செய்துவருகிறது. இந்த நிலையில், அமைச்சர்கள் நமச்சிவாயம், மல்லாடி கிருஷ்ணராவ், சட்டமன்ற உறுப்பினர்கள் ஜான்குமார், தீப்பாய்ந்தான் ஆகிய நான்கு பேரும் சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தனர். ஏற்கனவே, காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர் தனவேலு பதவி நீக்கம் செய்யப்பட்டார். இதனால் புதுச்சேரியில் ஆளும் காங்கிரஸ் கூட்டணிக்கும், என்.ஆர்.காங்கிரஸ் கூட்டணிக்கும் சமமாக 14 இடங்கள் உள்ளன.
இந்த நிலையில் முதல்வர் நாராயணசாமி தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என என்.ஆர்.காங்கிரஸ், பா.ஜ.க., அ.தி.மு.க. உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வந்தன. மேலும், முதல்வர் நாராயணசாமியை பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிட வேண்டும் என புதுச்சேரி மாநில துணைநிலை ஆளுநர் (பொறுப்பு) தமிழிசை சௌந்தராஜனை நேரில் சந்தித்து எதிர்க்கட்சித் தலைவர் ரங்கசாமி வலியுறுத்தினார்.
இதையடுத்து, புதுச்சேரி மாநில சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்க, அம்மாநில முதல்வருக்கு ஆளுநர் உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக புதுச்சேரி மாநில துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் பிறப்பித்துள்ள உத்தரவு கடிதத்தில், ''எதிர்க்கட்சியில், 7 என்.ஆர்.காங்கிரஸ், 4 அதிமுக, 3 பாஜக என்ற எண்ணிக்கைகளில் உறுப்பினர்கள் உள்ளனர். வருகிற பிப்ரவரி 22-ஆம் தேதி மாலை 05.00 மணிக்குள் புதுச்சேரி மாநில சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபித்து சட்டப்பேரவையில் நடைபெறவுள்ள வாக்கெடுப்பை வீடியோ பதிவு செய்யவும்'' எனக் கூறப்பட்டிருந்தது.
இந்நிலையில் புதுச்சேரி அரசு கொறடா, நியமன எம்.எல்.ஏக்கள் மூன்றுபேரை பாஜக எம்.எல்.ஏக்கள் என ஆளுநர் தமிழிசை குறிப்பிட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதுகுறித்து புதுச்சேரி அரசு கொறடா அனந்தராமன் கூறியுள்ளதாவது, ''3 நியமன எம்.எல்.ஏக்களைக் கட்சி ரீதியிலான எம்.எல்.ஏக்கள் என எடுத்துக்கொள்வது சட்டத்திற்குப் புறம்பானது. மத்திய அரசால் நியமிக்கப்பட்ட எம்.எல்.ஏக்களைப் பாஜகவினர் என சொல்வது அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிரானது. அவர்கள் வாக்களிக்க உரிமை உள்ளது என நீதிமன்றம் கூறினாலும், அவர்களைப் பாஜகவினர் என ஆளுநர் குறிப்பிடுவது தவறு'' எனத் தெரிவித்துள்ளார்.
மேலும், நியமன எம்.எல்ஏக்களைக் கட்சி சார்பில் குறிப்பிட்டால், அவர்களைத் தகுதி நீக்கம் செய்யவும் சட்டத்தில் வழிவகை உள்ளது எனவும் புதுச்சேரி அரசு கொறடா அனந்தராமன் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.