கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் உலகக்கோப்பை இறுதிப் போட்டியில் இந்திய அணியும் ஆஸ்திரேலிய அணியும் நாளை (19-11-23) மோத உள்ளன. 2003 இல் உலக கோப்பை இறுதிப் போட்டியில் இந்திய அணி பெற்ற தோல்விக்கு பதிலடி தர வேண்டும் என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். போதாக்குறைக்கு ஆஸ்திரேலிய வீரர்களும் தாங்கள் கண்டிப்பாக வெற்றி பெறுவோம், இந்திய அணியை எளிதில் வெல்வோம் என்று பேட்டிகள் கொடுத்து வருகின்றனர். இதுவும் ரசிகர்களுக்கு இந்திய அணி கண்டிப்பாக வெற்றி பெற்றே ஆக வேண்டும், ஆஸி வீரர்களின் பேச்சுக்கு பதிலடியாக இருக்க வேண்டும் என்று சமூக வலைத்தளங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் உலக கோப்பை இறுதிப் போட்டியை முன் எப்போதும் இல்லாத அளவுக்கு சிறப்பாக நடத்த ஐசிசி மற்றும் பிசிசிஐ முடிவு செய்து உள்ளது. அந்த வகையில், இறுதிப் போட்டியில் டாஸ் போட்ட பிறகு 1.30 மணி முதல் 1.50 மணி வரை இந்திய விமானப்படையின் சூரிய கிரண் குழு சாகச நிகழ்ச்சிகளில் ஈடுபட உள்ளது. சூரிய கிரண் பிரிவில் உள்ள 9 விமானங்கள் மைதானத்தின் வான்வெளியில் சாகசம் புரிய உள்ளது. இது உலகக் கோப்பை வரலாற்றில் முதன்முறையாக நடத்தப்பட உள்ள விமானப்படை சாகச நிகழ்ச்சி ஆகும்.
இதையடுத்து, முதல் அணி பேட்டிங் முடிவடைந்ததும் முன்னாள் சாம்பியன்களை கவுரவிக்கும் நிகழ்ச்சிக்கு பிசிசிஐ ஏற்பாடு செய்துள்ளது. இதில் உலகக் கோப்பையை வென்ற அணிகளின் கேப்டன்களுக்கு மரியாதை செய்யப்பட உள்ளது. இந்த நிகழ்ச்சி சுமார் 15 நிமிடங்கள் நடக்கும். அதன் பிறகு இசையமைப்பாளர் ப்ரீதம் தலைமையில் இசை நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதில் 500 நடன கலைஞர்கள் கலந்து கொண்டு நடனமாடி ரசிகர்களின் கண்களுக்கு விருந்து படைக்க உள்ளனர்.
இரண்டாவது இன்னிங்ஸின் போது 2-வது முறையாக வழங்கப்படும் குடிநீர் இடைவேளையின் போது 90 விநாடிகளுக்கு கண்கவரும் வகையில் லேசர் ஷோ நடத்தப்பட உள்ளது. இறுதியாக கடைசி பந்து வீசப்படும் போதும்,வெற்றி கோப்பையை சாம்பியன் அணி கைகளில் ஏந்தும் போது 1,200 டிரோன்கள் கொண்டு வானில் உலகக்கோப்பை டிராபியை வண்ணமயமாக காண்பிக்க உள்ளனர்.
மிகச் சிறப்பான முறையில் அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ள இந்த போட்டியைக் காண, உலகின் பல்வேறு நாடுகளில் இருந்தும் கிரிக்கெட் ரசிகர்கள் அகமதாபாத் நகரை நோக்கி வந்த வண்ணம் உள்ளனர். அகமதாபாத் விமான நிலையத்தின் வெளியே சிறப்பு கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. இசையுடன் கூடிய தாண்டியா நடனம், பொய்க்கால் குதிரை நடனம் உள்ளிட்ட நிகழ்வுகள் நடந்து வருகின்றன. கண்கவர் கலை நிகழ்ச்சி ஏற்பாடுகளால் அகமதாபாத் நகரமே விழாக்கோலம் பூண்டுள்ளது.
வெ. அருண்குமார்