பெண்கள் பாதுகாப்பு தொடர்பாக அனைத்து மாநில அரசுகள், யூனியன் பிரதேசங்களுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் சார்பில் கடிதம் அனுப்பப்பட்டது. அந்த கடிதத்தில் பெண்கள் எதிரான பாலியல் குற்றங்கள் மீது மாநில அரசுகள் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். பெண்களின் பாதுகாப்புதான் அரசுக்கு முக்கியம். பாலியல் குற்றங்களை கடுமையான முறையில் கையாள அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக கடிதத்தில் குறிப்பிட்டுள்ளது.
கடந்த 27- ஆம் தேதி ஐதராபாத்-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையிஸ் அருகே பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு எரித்துக் கொலை செய்யப்பட்டார். இந்தச் சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தில் தொடர்புடைய முகமது பாஷா, சிவா, நவீன், சென்ன கேசவுலு என்ற நான்கு பேரை சிசிடிவி கேமரா உதவியுடன் காவல்துறையினர் கைது செய்தனர்.
இந்த குற்றவாளிகளுக்கு மரண தண்டனை வழங்க வேண்டும் என்று நாடு முழுவதும் கோரிக்கை வலுத்து வந்தநிலையில், இன்று அந்த நான்கு பேரும் காவல்துறையினரால் என்கவுன்ட்டரில் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். குற்றம் நடந்த இடத்திற்கு அழைத்துச் சென்ற போது தப்பிக்க முயன்றதால் என்கவுண்டர் செய்ததாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இந்தியா முழுவதும் பெண்களுக்கு எதிரான வன்கொடுமை சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், மத்திய உள்துறை அமைச்சகம் மாநில அரசுகள், யூனியன் பிரதேச அரசுக்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.