பீகாரில் அரங்கேறிய அதிரடி அரசியல் மாற்றங்களுக்கு பின் நிதிஷ்குமார் மீண்டும் மாநில முதலமைச்சராகப் பதவியேற்றுக் கொண்டார். ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சியின் தலைவர் தேஜஸ்வி யாதவ் துணை முதலமைச்சராகப் பதவியேற்றுக் கொண்டார். தலைநகர் பாட்னாவில் நடைபெற்ற விழாவில், அவர்கள் இருவருக்கும் ஆளுநர் பகு சௌஹான் பதவிப் பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார்.
விழாவில், தேஜஸ்வியின் தாயாரும், முன்னாள் முதலமைச்சருமான ராப்ரி தேவி மற்றும் மனைவி ராஷ்டிரி, சகோதரர் தேஜ் பிரதாப் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
மக்களுக்கு பணியாற்றுவதற்காகவே தாங்கள் ஆட்சிக்கு வந்திருப்பதாக தேஜ் பிரதாப் தெரிவித்துள்ளார். பதவியேற்புக்கு பின் முதன்முறையாக செய்தியாளர்களைச் சந்தித்த முதலமைச்சர் நிதிஷ்குமார், "வரும் 2024- ஆம் ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற மக்களவை பொதுத்தேர்தலில் அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒருங்கிணைய வேண்டும் என்பதே தனது விருப்பம்" என்று கூறினார்.
நிதிஷ்குமாரின் இந்த அதிரடி பேட்டியால் பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக் கட்சிகளின் தலைவர்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.