இந்த விஞ்ஞான யுகத்திலும் நரபலி கொடுப்பது, புதையல் எடுப்பது, மாந்திரீகம் செய்வது எனக் கூறி ஏமாற்றுவது உள்ளிட்ட அதிர்ச்சி தரும் சில சம்பவங்கள் ஆங்காங்கே நடைபெறத் தான் செய்கிறது. அந்த வகையில் நோய்வாய்ப்பட்ட ஒருவரை முறையாக மருத்துவ சிகிச்சைக்கு அழைத்து செல்லாமல் மாந்திரீகம் செய்வதாகக் கூறிய நபரிடம் அழைத்துச் சென்று இறுதியில் நோய் பாதிக்கப்பட்டவர் உயிரிழந்த சம்பவம் தெலங்கானாவில் நிகழ்ந்துள்ளது.
தெலுங்கானாவின் மஞ்சிரியாலா மாவட்டத்தில் சென்னூர் பகுதியில் வசித்து வந்தவர் தாசரி மது. இவர் பல மாதங்களாக நோய்வாய்ப்பட்டு படுத்த படுக்கையாக இருந்துள்ளார். ஆனால் இவரது குடும்பத்தினர் அவருடைய நோய்க்கு சிகிச்சை அளிக்க மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லாமல் மாந்திரீகம் செய்வதாக கூறிய போலி சாமியார் ஒருவரிடம் அழைத்துச் சென்றுள்ளனர். தாசரி மதுவின் உடலில் தீய சக்தி இருப்பதாக தெரிவித்த அந்த போலி சாமியார் அதை முதலில் அவரது உடலில் இருந்து விரட்டினால் தான் அவர் பழையபடி வர முடியும் எனக் கூறியுள்ளார்.
அவரின் அத்தனை பேச்சுகளையும் நம்பிய குடும்பத்தினர் மாந்திரீக பூஜைக்கு தாங்கள் உடன்படுவதாக ஒப்புதல் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து கோதாவரி ஆற்றங்கரைக்கு கொண்டு செல்லப்பட்ட தாசரி மதுவின் உடலில் இருந்த ஆடைகளை களைத்த சாமியார் நோய்வாய்ப்பட்ட அவரை நிர்வாணமாக உட்காரவைத்து பூஜை என்ற பெயரில் அடித்து கொடுமைப்படுத்தியுள்ளார். ஆனால் அங்கு நடந்த சித்ரவதைகளை தாங்க முடியாமல் அவரது உடல்நிலை மேலும் பாதிக்கப்பட்டது. இறுதியில் மாந்திரீக பூஜை செய்யப்பட்ட இடத்திலேயே தாசரி மது உயிரிழந்தார்.
இந்த உயிரிழப்பு சம்பவத்தை வெளியே கசிய விடக்கூடாது என்பதற்காக அங்கேயே ஈமச்சடங்கு செய்யும் காரியங்களில் போலி சாமியார் இறங்கினார். தாசரி மதுவின் குடும்பத்தாரையும் எப்படியோ பேசி சமாளித்த சாமியார் உடலுக்கு தீ வைத்து எரிக்க ஏற்பாடுகளை செய்தார். ஆனால் தாசரி மதுவின் குடும்பத்தாருடன் அங்கு சென்றிருந்த உறவினரான ஒருவர் ஆரம்பத்தில் இருந்தே செல்போனில் இந்த பூஜை வீடியோ காட்சிகளை ரகசியமாக பதிவு செய்து வைத்திருந்தார். அதனை போலீசாருக்கு அனுப்பியதையடுத்து சம்பவத்திற்கு வந்த போலீசார் சாமியாரை கைது செய்தனர். தாசரி மதுவின் உடல் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. மூடநம்பிக்கையால் நிகழ்ந்துள்ள இந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.