அயோத்தியில் சர்ச்சைக்குரியதாக விளங்கிய 2.77 ஏக்கர் நிலத்தை இந்து அமைப்புக்களுக்கு வழங்க உத்தரவிட்டும், அங்கு ராமர் கோவில் கட்ட அனுமதி அளித்தும் உச்சநீதிமன்றம் கடந்த 9-ந்தேதி தீர்ப்பு அளித்தது. மசூதி கட்டிக்கொள்ள முஸ்லிம்களுக்கு 5 ஏக்கர் நிலம் ஒதுக்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த தீர்ப்பின் மீது மறுஆய்வு மனு தாக்கல் செய்வது பற்றி முஸ்லிம் அமைப்பான ஜாமியத் உலமா இ இந்த் அமைப்பு, அதன் செயற்குழு கூட்டத்தில் இன்று முடிவு எடுக்கிறது.
இது குறித்து அந்த அமைப்பின் தலைவர் மவுலானா அர்ஷாத் மதானி மேலும் கூறுகையில், " எங்களுக்கு 5 ஏக்கர் நிலம் வேண்டும் என விரும்பி இருந்தால், நாங்கள் 70 ஆண்டு காலமாக இந்த வழக்கை நடத்தி இருக்க மாட்டோம். நிலத்துக்காக வழக்கை தொடரவில்லை. உரிமைக்காகத்தான் வழக்கை நடத்தினோம். முஸ்லிம்களிடம் போதுமான நிலம் உள்ளது. எங்கள் நிலத்தில்தான் மசூதிகள் கட்டி இருக்கிறோம். இனியும் அப்படியே செய்வோம்" என்று குறிப்பிட்டார்.