தெலுங்கானா மாநிலத்தைச் சேர்ந்தவர் ரமேஷ் (54). தொழிலதிபரான இவர், நந்தினி (29,பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்ற பெண்ணை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டுள்ளார். இந்த நிலையில், தெலுங்கானா மாநிலத்தில் உள்ள ஹைதராபாத்தில் தனது கணவரை காணவில்லை என நந்தினி போலீசில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில், போலீசார் வழக்குப்பதிவு விசாரணை நடத்தி வந்தனர். அந்த விசாரணையில், நந்தினி மீது சந்தேகம் ஏற்படவே போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
இதற்கிடையில், கர்நாடகா மாநிலம் குடகு மாவட்டம் சுண்டிகோப்பா அருகே உள்ள ஒரு காபி தோட்டத்தில் உடல் எரிந்து கருகிய நிலையில் ஒரு ஆணின் சடலம் கிடந்துள்ளது. இதனை கண்ட அப்பகுதியினர், இது குறித்து அப்பகுதி போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். தகவலின் பேரில், சம்பவ இடத்திற்கு விரைந்த வந்த போலீசார் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், அந்த உடல் யாருடையது என்பது பற்றி போலீசார் வழக்குப்பதிவு விசாரணை நடத்தினர். பல்வேறு முயற்சிகள் மேற்கொண்டாலும், போலீசாருக்கு எந்தவித துப்பும் கிடைக்கவில்லை.
அதன் பிறகு, அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்து சோதனை நடத்தினர். அப்போது, சிவப்பு நிற மெர்சிடஸ் பென்ஸ் கார் ஒன்று சந்தேகத்திற்கிடமாக சென்று கொண்டிருந்ததை போலீசார் கண்டுபிடித்தனர். அதன்படி, அந்த காரின் உரிமையாளர் யார் என்பது குறித்து போலீசார் ஆய்வு செய்து விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில், அந்த கார், தெலுங்கானா மாநிலத்தைச் சேர்ந்த தொழிலதிபர் ரமேஷின் பெயரில் பதிவி செய்யப்பட்டிருந்ததும், அவர் காணாமல் போனதாக அவரது மனைவி நந்தினி போலீசில் புகார் அளித்திருந்ததும் தெரியவந்தது.
இதனையடுத்து, ஹைதராபாத் போலீசாரால் கைது செய்யப்பட்டிருந்த நந்தினியை கர்நாடகா போலீசார் காவலில் எடுத்து விசாரணை நடத்தினர். போலீசார் நடத்திய கிடுக்குப்பிடி விசாரணையில், கணவர் ரமேஷை, தனது ஆண் நண்பர் நிகில் மற்றும் அன்கூர் ஆகியோருடன் சேர்ந்து கொலை செய்து உடலை எரித்ததாக போலீசாரிடம் நந்தினி வாக்குமூலம் கொடுத்தார். நந்தினியும், ரமேஷும் மறுமணம் செய்துகொண்டு வந்துள்ளனர். கணவர் ரமேஷுடன் ஆடம்பர வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருந்த நந்தினி, ரமேஷிடம் ரூ.8 கோடி கேட்டுள்ளார். ஆனால், அவர் இந்த பணத்தை கொடுக்க மறுத்ததால், நந்தினி ரமேஷ் மீது ஆத்திரம் அடைந்துள்ளார். இதையடுத்து, தனது ஆண் நண்பர் நிகில் மற்றும் அங்கூருடன் சேர்ந்து ரமேஷின் சொத்துக்களை அடைவதற்காக ரமேஷை கொலை செய்ய நந்தினி திட்டமிட்டுள்ளார்.
அதன்படி, கடந்த அக்டோபர் 1ஆம் தேதி ஹைதராபாத்தில் உள்ள உப்பலில் ரமேஷின் கழுத்தை நெரித்து கொலை செய்த நந்தினி மற்றும் அவரது கூட்டாளிகள், வீட்டில் வைத்திருந்த பணத்தை எடுத்துக்கொண்டு அங்கிருந்து பெங்களூருக்கு காரில் சென்றுள்ளனர். அதன்பின், அங்குள்ள ஒரு காபி தோட்டத்தில், ரமேஷின் உடலை எரித்து அங்கிருந்து ஹைதராபாத்துக்கு திரும்பி சென்றுள்ளனர். அங்கு சென்றதும், ரமேஷை காணவில்லை என நந்தினி போலீசில் புகார் அளித்துள்ளார் என்பது தெரியவந்தது. இதையடுத்து, நந்தினி மற்றும் அவரது கூட்டாளிகளை போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்து கைது செய்துள்ளனர். சொத்துக்காக கணவரை கொலை செய்து போலீசில் நாடகமாடிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.