ஆந்திர மாநில முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு 2014 ஆம் ஆண்டு ஆட்சிக் காலத்தில், திறன் மேம்பாட்டுக் கழகத்தில் ரூ. 300 கோடிக்கு மேல் முறைகேடு செய்ததாகப் புகார் எழுந்தது. இந்த புகாரின் பேரில், சந்திரபாபு நாயுடு வீட்டிற்குச் சென்ற மாநில சிஐடி காவல்துறையினர் அவரிடம் கைது செய்வதற்கான கைது வாரண்ட்டை வழங்கினர். இதனையடுத்து கைது செய்யப்பட்ட சந்திரபாபு நாயுடு, நந்தியாலா பகுதியில் இருந்து விஜயவாடா சிறைக்கு கொண்டு செல்லப்படுவதாகத் தகவல் வெளியாகியுள்ளது. 2021 ஆம் ஆண்டு பதிவான இந்த வழக்கு தொடர்பாக இதுவரை 10 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், தற்போது சந்திரபாபு நாயுடுவும் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்திரபாபு நாயுடுக்கு எதிராக அனுப்பப்பட்ட நோட்டீஸின்படி, பிரிவு 120 பி, பிரிவு 420 மற்றும் பிரிவு 465 உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் சந்திரபாபு கைது செய்யப்பட்டுள்ளார். சந்திரபாபு நாயுடு கைதை தொடர்ந்து ஆந்திரா மாநிலம் முழுவதும் பதற்றமான சூழல் நிலவி வருகிறது. மேலும் அசம்பாவிதங்கள் நடைபெறாமல் தடுப்பதற்காக போலீசார் பேருந்துகளை ஆங்காங்கே நிறுத்தி வைத்துள்ளனர்.
ஆந்திரப் பிரதேச திறன் மேம்பாட்டு கழகம், கியா போன்ற தொழிற் நிறுவனங்களுக்கு அருகில் உள்ள கல்வி நிறுவனங்களுடன் இணைந்து வேலையற்ற இளைஞர்களுக்கு பயிற்சி அளிப்பதற்காக இந்த திட்டத்தை சந்திரபாபு நாயுடு கொண்டு வந்தார். இதையடுத்து, ஜெர்மன் பொறியியல் நிறுவனமான சிமென்ஸ் நிறுவனத்துடன் ஆந்திர மாநில அரசு புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்தது. இதையடுத்து இண்டஸ்ட்ரி சாப்ட்வேர் இந்தியா லிமிடெட் மற்றும் டிசைன் சிஸ்டம்ஸ் பிரைவேட் லிமிடெட் ஆகியவற்றை உள்ளடக்கிய கூட்டமைப்புடன் இணைந்து திறன் மேம்பாட்டுக் கழகத்தால் இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட்டது. இதில் சிமென்ஸ் நிறுவனம், வேலையில்லா இளைஞர்களுக்காக ஆறு சிறப்பு மையங்களை நிறுவும் பணியையும் மேற்கொண்டது.
சிமென்ஸ் நிறுவனம், இந்த திட்டத்தில் எந்தவித முதலீடு செய்யாவிட்டாலும், மூன்று மாதங்களுக்குள் ஐந்து தவணைகளில் ரூ.300 கோடிக்கு மேல் அந்நிறுவனத்திற்கு மாநில அரசு வழங்கப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்திருந்தது. இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தில், மொத்த திட்ட மதிப்பான ரூ.3,356 கோடியில் 10 சதவீத பங்களிப்பை ஆந்திர அரசு ஏற்க வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தாகக் கூறப்படுகிறது.
இதையடுத்து, அமலாக்கத்துறை விசாரணையின்படி, ஆந்திரப் பிரதேச அரசு டெண்டர் விடாமல் ரூ.300 கோடிக்கு மேல் வழங்கப்பட்டதன் மூலம் நிறுவப்பட்ட விதிமுறைகளை மீறிய செயலாகும் என்று தெரிவித்திருந்தது. மேலும், திறன் மேம்பாட்டிற்காக எந்தவித உறுதியான வருமானமும் இல்லாமல், அலைட் கம்ப்யூட்டர்ஸ், ஸ்கில்லர்ஸ் இந்தியா பிரைவேட் லிமிடெட் உள்ளிட்ட ஷெல் நிறுவனங்களுக்கு ரூ. 200 கோடிக்கு மேல் வழங்கப்பட்டுள்ளதாகவும் கூறியிருந்தது.
இந்த நிதிகளை உள்ளடக்கிய 70க்கும் மேற்பட்ட பரிவர்த்தனை, ஷெல் நிறுவனங்கள் மூலம் நடந்ததாகவும் கூறப்படுகிறது. மேலும், நிதித்துறை அதிகாரிகளின் ஆட்சேபனையை மீறி முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு, இந்த நிறுவனங்களுக்கு உடனடியாக நிதியை வழங்க உத்தரவிட்டுள்ளதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது. இந்த குற்றச்சாட்டை விசாரித்த ஆந்திர மாநில சி.ஐ.டி காவல்துறையினர், முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடுவை கைது செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.