குடியரசுத் தலைவர் தேர்தலில் பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளராக ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த திரௌபதி முர்மு அறிவிக்கப்பட்டுள்ளார். அவருக்குப் பிரதமர் நரேந்திர மோடி, ஒடிசா மாநில முதலமைச்சர் நவீன் பட்நாயக் உள்ளிட்டோர் வாழ்த்துத் தெரிவித்துள்ளனர்.
குடியரசுத் தலைவர் வேட்பாளர் திரௌபதி முர்மு யார்? அவரது பின்னணி குறித்து விரிவாகப் பார்ப்போம்!
கவுன்சிலராக அரசியல் பயணத்தைத் தொடங்கியவர் திரௌபதி முர்மு. சட்டமன்ற உறுப்பினர், அமைச்சர், ஆளுநர் என அடுத்தடுத்து பல வளர்ச்சிகளைக் கண்டவர். 1958- ஆம் ஆண்டு ஜூன் மாதம் 20- ஆம் தேதி அன்று ஒடிசா மாநிலத்தில் பிறந்த திரௌபதி முர்மு, சந்தல் என்ற பழங்குடி இனத்தைச் சேர்ந்தவர். புவனேஸ்வரில் பட்டம் பயின்ற இவர், ஆசிரியராகப் பணியாற்றினார். பின்னர், அரசியலில் ஆர்வம் ஏற்பட்டு, பா.ஜ.க.வில் இணைந்து கடந்த 1997- ஆம் ஆண்டு நடைபெற்ற கவுன்சிலர் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
அதைத் தொடர்ந்து, கடந்த 2002- ஆம் ஆண்டு ராய்ரங்க்ப்பூர் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஒடிஷாவில் பிஜு ஜனதா தளம் மற்றும் பா.ஜ.க. கூட்டணி ஆட்சி அமைந்திருந்த போது, இரண்டு ஆண்டுகள் போக்குவரத்துத்துறை அமைச்சராகவும், அதன் பிறகு இரண்டு ஆண்டுகளுக்கு மீன்வளத்துறை அமைச்சராகவும் பதவி வகித்துள்ளார்.
2007- ஆம் ஆண்டு ஒடிசா மாநிலத்தின் சிறந்த சட்டமன்ற உறுப்பினருக்கான விருதையும் இவர் பெற்றுள்ளார். பா.ஜ.க.வில் தேசிய பழங்குடியின அமைப்பின் துணைத் தலைவராகவும் பதவி வகித்துள்ளார். கடந்த 2015- ஆம் ஆண்டு ஜார்கண்ட் மாநிலத்தின் முதல் பெண் ஆளுநராக இவர் நியமிக்கப்பட்டார். இந்தியாவிலேயே பழங்குடியினத்தைச் சேர்ந்த முதல் பெண் ஆளுநர் என்ற பெருமையையும் அப்போது பெற்றார்.
அரசியலில் அடுத்தடுத்து மிக முக்கிய இடங்களை அவர் பெற்றிருந்தாலும், தனிப்பட்ட வாழ்க்கையில் பெரும் இழப்புகளைச் சந்தித்துள்ளார். இவரது கணவர் மற்றும் இரண்டு மகன்கள் அடுத்தடுத்து உயிரிழந்தது இவரது வாழ்வில் நடைபெற்ற பெரிய சோகம். இருப்பினும், தன்னம்பிக்கை தளராமல் மக்கள் பணியாற்றிய இவர், தற்போது குடியரசுத்தலைவர் வேட்பாளராக உயர்ந்திருக்கிறார்.
தேர்தலில் வெற்றி பெறும் பட்சத்தில் இந்தியாவின் முதல் பழங்குடியின குடியரசுத்தலைவர் என்ற பெருமையைப் பெற உள்ளார்.