Skip to main content

ஒருங்கிணைப்பாளர் யார்? - முடிவெடுக்கும் தறுவாயில் இந்தியா கூட்டணி

Published on 01/09/2023 | Edited on 01/09/2023

 

NN

 

அடுத்த வருடம் நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவிற்கு எதிராகக் கூட்டணி அமைப்பது குறித்துப் பல்வேறு எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து பேசி வருகின்றனர். அந்த வகையில் பீகார் மாநிலம் பாட்னாவில் எதிர்க்கட்சித் தலைவர்களின் முதல் கூட்டம் கடந்த ஜூன் மாதம் 23 ஆம் தேதி நடைபெற்றது. இதையடுத்து எதிர்க்கட்சித் தலைவர்களின் 2 ஆவது ஆலோசனைக் கூட்டம் பெங்களூருவில் கடந்த ஜூலை மாதம் 17 மற்றும் 18 ஆகிய இரு தேதிகளில் நடைபெற்றது.

 

அதனைத் தொடர்ந்து எதிர்க்கட்சிகளின் மூன்றாவது கூட்டம் நேற்று மும்பையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் 28 கட்சிகளைச் சேர்ந்த 65 தலைவர்கள் கலந்து கொண்டனர். அதன்படி தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், பீகார் மாநில முதல்வர் நிதிஷ்குமார், காங்கிரஸ் கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர்களான சோனியா காந்தி, ராகுல் காந்தி, ராஷ்ட்ரிய ஜனதாதள தலைவர் லாலு பிரசாத் யாதவ், தேஜஸ்வி யாதவ், சீதாராம் யெச்சூரி, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், ஜார்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன், வைகோ, திருமாவளவன், ஜவாஹிருல்லா உள்ளிட்டோர் கலந்து கொண்டு ஆலோசனை மேற்கொண்டனர்.

 

இன்று இரண்டாவது நாள் கூட்டம் நடைபெற இருக்கும் நிலையில், இந்தியா கூட்டணியின் அடையாளமாக இலச்சினையை எதிர்க்கட்சிகள் வெளியிட இருக்கின்றன. அதேபோல் கூட்டணிக்கு ஒரு ஒருங்கிணைப்பாளரை நியமிப்பது உள்ளிட்ட முக்கிய முடிவுகள் இந்த கூட்டத்தில் எடுக்கப்பட இருக்கிறது. எதிர்க்கட்சிகளின் இந்த இந்தியா கூட்டணிக்கு ஒருங்கிணைப்பாளராக நிதீஷ்குமார் நியமிக்கப்பட வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த ஆலோசனைக்குப் பிறகு இன்று மாலை 3 மணி அளவில் இந்தியா கூட்டணிக் கட்சியைச் சேர்ந்தவர்கள் செய்தியாளர்களைக் கூட்டாக சந்திப்பார்கள் எனக் கூறப்படுகிறது. அதே நேரம் மகாராஷ்டிரா பாஜக கூட்டணியின் ஆலோசனைக் கூட்டமும் மும்பையில் இன்று நடைபெற உள்ளது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்