ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு நிர்பயா குற்றவாளிகள் முகேஷ் சிங், வினய், பவன், அக்ஷய் சிங்கிற்குத் தூக்குத் தண்டனை நிறைவேற்றப்பட்டது. டெல்லி திஹார் சிறையில் உள்ள தூக்கு மேடையில் இன்று (20/03/2020) காலை 05.30 மணிக்கு நான்கு குற்றவாளிகளும் தூக்கிலிடப்பட்டனர். இதை மாணவியின் பெற்றோர் மட்டுமில்லாமல், நாடு முழுவதும் பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள், அரசியல் கட்சித் தலைவர்கள் உள்ளிட்டோர் வரவேற்றுள்ளனர். தண்டனை தாமதமாக நிறைவேற்றப்பட்டாலும், நிச்சயம் நிர்பயாவின் ஆத்மா சாந்தியடையும் என்று அவர்கள் கூறியிருக்கின்றனர்.
இந்த நிலையில், உத்தரப்பிரதேச மாநிலம் மீரட் பகுதியைச் சேர்ந்த பவன் ஜல்லாட் நிர்பயா குற்றவாளிகள் நான்கு பேருக்கும் தண்டனையை நிறைவேற்றினார். உத்தரப்பிரதேச மாநிலம் மீரட்டில் இருந்து பலத்த போலீஸ் பாதுகாப்புக்கிடையே பவன் ஜல்லாட் டெல்லி திஹார் சிறைக்கு அழைத்து வரப்பட்டார். அதைத் தொடர்ந்து நேற்று (19/03/2020) திஹார் சிறையில் பவன் தூக்குத் தண்டனையை ஒத்திகை செய்து பார்த்தார்.அதன் தொடர்ச்சியாகச் சிறையில் தனி அறையில் தங்கிய பவன் இன்று (20/03/2020) அதிகாலை 03.30க்கு எழுந்து குளித்து முடித்து தண்டனையை நிறைவேற்றினார்.
இதையடுத்து பணியாளர் பவனுக்கு மனநல ஆலோசனை வழங்கவும் சிறைத்துறை நிர்வாகிகள் ஏற்பாடு செய்துள்ளனர். நான்கு குற்றவாளிகளையும் தூக்கிலிட பவனிடம் எட்டு மணிலா தூக்குக் கயிறுகளைச் சிறைத்துறை அதிகாரிகள் அளித்தனர். எட்டு கயிறுகளில் நான்கை தேர்ந்தெடுத்த பவன், மீதமுள்ள நான்கு கயிறுகளைத் தேவைப்படின் பயன்படுத்த வைத்து கொண்டார். நான்கு குற்றவாளிகளையும் தூக்கிலிட பவனுக்கு தலா ரூபாய் 20,000 என ரூபாய் 80,000 ஊதியமாகத் தரப்படுகிறது. மேலும், பவனுக்கு மனநல ஆலோசனை வழங்கவும் சிறை நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது என்கின்றனர்.