ஜூன் மாத தொடக்கத்திலிருந்தே புதுச்சேரியில் கரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நேற்று ஒரே நாளில் 30 பேருக்கு கரோனா தொற்று உறுதியான நிலையில், இன்று 27 பேருக்கு தொற்று உறுதியானது. கரோனா தோற்றினால் பாதிக்கப்பட்டு இன்றோடு இதுவரை 6 பேர் உயிரிழந்துள்ளனர். பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 271 ஆக உயர்ந்துள்ளது. இவர்களில் 116 பேர் குணமடைந்துள்ள நிலையில், 149 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
இந்நிலையில் புதுச்சேரி, கதிர்காமம் இந்திரா காந்தி அரசு பொது மருத்துவமனையிலுள்ள கரோனா பிரிவை முதலமைச்சர் நாராயணசாமி மற்றும் சுகாதாரத்துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் ஆகியோர் நேரடியாக சென்று கரோனா நோயாளிகள் சிகிச்சை பெற்று வரும் பகுதிகளை ஆய்வு செய்தார்கள். அதனைத்தொடர்ந்து மருத்துவ அதிகாரிகள், மருத்துவர்கள் உடன் ஆலோசனைக் கூட்டம் நடத்தினார்கள்.
இதனிடையே தமிழகத்தை சேர்ந்த சென்னை, விழுப்புரம், கடலூர் மாவட்டங்களை சேர்ந்தவர்களால்தான் புதுச்சேரியில் தொற்று பரவுகிறது. எனவே புதுவைக்குள் தமிழகத்தை சேர்ந்தவர்களை அனுமதிக்கக்கூடாது என்று முதலமைச்சர் நாராயணசாமி நேற்று திட்டவட்டமாக அறிவித்தார். அதையடுத்து புதுவை மாநில எல்லைகளை புதுவை போலீசார் மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் மூடியுள்ளனர். தமிழகத்தை சேர்ந்தவர்கள் புதுவைக்குள் நுழைய அனுமதி மறுக்கப்பட்டு வருகிறார்கள். அதையடுத்து வானூர் பகுதியை சேர்ந்த 10-க்கும் மேற்பட்டோர் புதுவை கோரிமேடு எல்லையில், புதுச்சேரியில் இருந்து தமிழகத்துக்கு வரும் வாகனங்களை மறித்து, ‘தமிழ்நாட்டுக்குள் புதுவையில் இருந்து யாரும் வரக்கூடாது’ என்று வாகன ஓட்டிகளிடம்கூறி வாகனங்களை மறித்தனர். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த கோட்டக்குப்பம் டி.எஸ்.பி அஜய்தங்கம் அவர்களை சுற்றி வளைத்தார். இரு தரப்புக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதனால் 4 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த சம்பவத்தால் புதுவை - தமிழக எல்லையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.