தமிழ், பாரதத் தாயின் நாவில் உள்ள மொழி என்பதைப் புரிந்துகொண்டு பிரதமர் செயல்படுகிறார் என மத்திய நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.
உத்திர பிரதேச மாநிலம் காசியில் நடைபெற்று வரும் காசி தமிழ்ச் சங்கமம் விழாவில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கலந்து கொண்டார்.
அப்போது பேசிய அவர், “பிரதமர் தமிழ் இலக்கியங்கள் திருக்குறள், புறநானூறு, அகநானூறு போன்றவற்றை ஒவ்வொரு மேடையிலும் மேற்கோள் காட்டும்போது எனக்குப் புல்லரிக்கிறது. அவர் ஒவ்வொரு மொழிக்கும் முக்கியத்துவம் கொடுக்கிறார். ஆனால் தமிழ் என்று வரும் பொழுது அதன் பழமையைப் புரிந்துகொண்டு நாட்டின் பாரதத் தாயின் நாவில் உள்ள மொழி என்பதால் அதை எடுத்துச் சொல்லுகிறார்.
நாம் எல்லாரும் ஒன்றாக இருக்க வேண்டும் எனச் சொல்லுகிறார். ஆனால் இவர் இந்தியைத் திணிக்கிறார் என்கிறார்கள். இந்த விதண்டாவாதம் பேசும்பொழுது தான் நமக்குத் தோன்றுகிறது. இப்பேர்ப்பட்ட பழமையான கலாச்சாரத்தை நாம் அரசியல் காரணங்களுக்காக மறந்து விடுவோமா அல்லது அதை ஒத்தி வைத்துவிடுவோமா என யோசிக்கும் பொழுதுதான் தமிழ்ச் சங்கமத்தின் முக்கியத்துவம் நமக்குப் புரிகிறது” என்றார்.