உலகம் முழுவதும் உள்ள கோடிக்கணக்கான மக்கள் உபயோகிக்கும் செயலி தான் வாட்ஸ் அப். இந்த செயலி மூலம், தகவல்களை பரிமாறவும், இணைய சேவை மூலம் எந்தவித கட்டணமுமின்றி வீடியோ கால், ஆடியோ கால் போன்றவற்றை பயன்படுத்தவும் முடியும். மேலும், புகைப்படங்கள், வீடியோக்கள், ஸ்டிக்கர்கள் என அனைத்து விதமான பரிமாற்றங்களையும் இந்த செயலி மூலம் அனுப்பக்கூடிய வசதிகள் உண்டு. இந்த செயலியை உபயோகிக்காத மக்கள் மிகவும் சொற்பமாக தான் இருக்க முடியும் என்றுதான் கூற வேண்டும்.
இதற்கிடையில் வாட்ஸ் அப் பயனர்களின் வசதிகளுக்கு ஏற்றவாறு வாட்ஸ் அப் நிறுவனம் அவ்வப்போது புதிய அப்டேட்களை அறிமுகப்படுத்தி வருகிறது. அந்த வகையில், இந்த செயலி மூலம் பயனர் ஒருவருக்கு அனுப்பும் செய்திகளை மூன்றாம் நபர்கள் பார்க்க முடியாதவாறு எண்டு டு எண்டு என்கிரிப்ஷன் ( End to End Encryption) முறையை கொண்டு வந்தது. இதனைப் பயன்படுத்தி பயனர்கள், தாங்கள் அனுப்பும் செய்திகளை பாதுகாத்து கொள்ளலாம். இதனால், தனிப்பட்ட ஒருவரின் செய்திகள் பாதுகாக்கப்படும் என்று கூறப்படுகிறது.
இந்த நிலையில், கடந்த 2021ஆம் ஆண்டு இந்தியாவில் தகவல் தொழில்நுட்ப சட்டங்களில் மத்திய அரசு புதிய மாற்றத்தை கொண்டு வந்தது. மத்திய அரசு கொண்டு வந்த அந்த சட்டத்தில் கூறியதாவது, போலி செய்திகளையும், நாட்டின் பாதுகாப்பு காரணங்களுக்காகவும் தவறான செய்தி பகிர்வுகளை கண்டறிய வேண்டும். இதனால், வாட்ஸ் அப், பேஸ்புக் போன்ற செய்தி பகிர்வு செயலி வாயிலாக பகிரப்படும் அனைத்து செய்திகளும் சேமிக்கப்பட வேண்டும் என்று கூறப்பட்டது.
இதனை எதிர்த்து வாட்ஸ் அப், பேஸ் புக் ஆகிய நிறுவனங்கள் டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இது தொடர்பான வழக்கு நேற்று (25-04-24) டெல்லி உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, மத்திய அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர் கூறுகையில், ‘வாட்ஸ் அப் எண்டு டு எண்ட் என்கிரிப்ஷன் காரணமாக போலி செய்திகளை கண்டறிவதில் சிக்கல் ஏற்படுகிறது. மேலும், இது போலி செய்திகளால் நாட்டில் நிலவும் அமைதி மற்றும் ஒற்றுமையை சீர்குலைத்துவிடும்’ என வாதிட்டார்.
இதனையடுத்து, வாட்ஸ் அப் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் தேஜஸ் காரியா, “இந்த சட்டத்தை அமல்படுத்துவதால் நாங்கள் ஒரு முழுமையான சங்கிலியை வைத்திருக்க வேண்டும். மேலும், மில்லியன் கணக்கான செய்திகளை பல ஆண்டுகளாக சேமிக்க வேண்டும் நிலை உருவாகும். உலகில் எந்த நாட்டிலும் இது போன்ற சட்டங்கள் இல்லை. இது போன்ற சட்டங்களை கொண்டு வந்து என்கிரிப்ஷனை எடுக்க சொன்னால் வாட்ஸ்அப் இந்தியாவை விட்டு செல்ல வேண்டி இருக்கும்” எனத் தெரிவித்தார். இருதரப்பு வாதங்களை கேட்ட நீதிபதிகள், இது தொடர்பான வழக்கை ஒத்திவைத்தனர்.