Skip to main content

'26 நாட்கள் என்ன செய்து கொண்டிருந்தீர்கள்?'- எஸ்பிஐக்கு உச்சநீதிமன்றம் சரமாரி கேள்வி

Published on 11/03/2024 | Edited on 11/03/2024
Supreme Court

பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு கடந்த 2018 ஆம் ஆண்டு கொண்டுவந்த தேர்தல் பத்திரம் திட்டத்தில் வெளிப்படைத்தன்மை இல்லை என எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வந்தன. இதையடுத்து, அரசியல் கட்சிகள் தேர்தல் பத்திரங்கள் மூலமாக நிதியைப் பெறுவது என்ற திட்டத்தை எதிர்த்து ஏடிஆர், காமன் கேஸ் உள்ளிட்ட தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் மற்றும் மார்க்சிஸ்ட் சார்பில் உச்சநீதிமன்றத்தில் 4 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

இது தொடர்பான வழக்கு விசாரணை நீதிமன்றத்தில் நடைபெற்றது. இந்த வழக்கில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு கடந்த பிப்.15 ஆம் தேதி வழங்கிய தீர்ப்பில், 'அரசை கணக்கு கேட்கும் உரிமை நாட்டு மக்களுக்கு உள்ளது என பல தருணங்களில் நீதிமன்றங்கள் கூறியுள்ளன. தகவல்களை வெளிப்படையாக தெரிவிக்காத தேர்தல் பத்திரங்கள் சட்டத்தை மீறும் வகையில் உள்ளன. இந்த திட்டம் தகவல் அறியும் உரிமைச் சட்டம் மற்றும் அரசியல் சாசனப்பிரிவு 19 கீழ் உட்பிரிவு 1 ஐ ஆகியவற்றை மீறும் வகையில் உள்ளது. எனவே தேர்தல் பத்திரங்கள் மக்களின் அடிப்படை உரிமைகளை மீறுவதாக உள்ளது. தேர்தல் பத்திரங்கள் மூலம் மட்டுமே கருப்பு பணத்தை ஒழிக்க முடியாது. தேர்தல் பத்திரங்கள் தகவல் பெறும் உரிமை சட்டத்திற்கு எதிராக அமையும். நன்கொடை தருவோர் குறித்த விவரங்களை தெரிவிக்க தேவையில்லை என்பது வாக்காளர்களின் உரிமைகளை பறிப்பதாக உள்ளது.

அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை வழங்குவது, அதனால் ஏற்படும் ஆதாயங்களை கருத்தில் கொண்டு இருக்கலாம். தகவல் அறியும் உரிமை சட்டம் அரசியல் நன்கொடைகளுக்கும் நீட்டிக்கப்படுகிறது. தேர்தல் பத்திரங்கள் அரசியலமைப்புச் சட்டத்துக்கு எதிரானது. தேர்தல் பத்திர நன்கொடைக்காக கம்பெனிகள் சட்டத்தில் திருத்தம் மேற்கொண்டது சட்ட விரோதம் ஆகும். தேர்தல் பத்திரத்தை அறிமுகம் செய்ய மக்கள் பிரதிநித்துவ சட்டம் மற்றும் வருமான வரி சட்டத்தில் மேற்கொண்ட திருத்தங்கள் ரத்து செய்யப்படுகிறது. தற்போதைய விதிகளின் கீழ் உள்ள தேர்தல் பத்திர முறை சட்டவிரோதமாக உள்ளது. தேர்தல் பத்திரங்கள் மூலம் நன்கொடை அளித்தவர்கள் விபரங்களையும் வெளியிட உத்தரவிடப்படுகிறது. தேர்தல் பத்திரங்களை வழங்குவதை, எஸ்.பி.ஐ வங்கி உடனடியாக நிறுத்த வேண்டும்' என கூறப்பட்டது.

மேலும் தேர்தல் பத்திரங்கள் செல்லாது என தீர்ப்பளித்த நீதிமன்றம், வரும் மார்ச் 6ஆம் தேதிக்குள் நன்கொடை தொடர்பாக தேர்தல் ஆணையத்திடம், பாரத் ஸ்டேட் வங்கி (எஸ்.பி.ஐ) விவரங்களை அளிக்க வேண்டும். மேலும், அதனை மார்ச் 31ஆம் தேதிக்குள் இணையப்பக்கத்தில் தேர்தல் ஆணையம் வெளியிட வேண்டும் எனவும் நீதிபதிகள் தீர்ப்பளித்தது.

உச்சநீதிமன்றம் அளித்த இந்த தீர்ப்பை எதிர்க்கட்சியினர் வரவேற்றுள்ளனர். ஆனால் தேர்தல் பத்திரங்கள் குறித்த விவரங்களை இந்திய தேர்தல் ஆணையத்திற்கு வழங்க ஜூன் 30ஆம் தேதி வரை கால அவகாசம் வழங்க வேண்டும் என எஸ்.பி.ஐ வங்கி உச்சநீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்தது. இது பல்வேறு சர்ச்சைகளுக்கு வழிவகுத்தது.

Supreme Court

இதுதொடர்பாக எஸ்பிஐ வங்கி மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டிருந்தது. இந்நிலையில், இன்று நடைபெற்ற அந்த வழக்கின் விசாரணையில் எஸ்.பி.ஐ வங்கிக்கு பல்வேறு கேள்விகளை நீதிமன்றம் வைத்துள்ளது. '24க்கும் குறைவான அரசியல் கட்சிகளே தேர்தல் பத்திரங்கள் மூலம் நன்கொடை பெற்றுள்ளன. கட்சிகளுக்கு நன்கொடை கொடுத்தவர்கள் மற்றும் அவர்களுக்கு இடையிலான தொடர்புபற்றி எதுவுமே கேட்கவில்லை. ஆனால் மிக சுலபமாக சேகரிக்கக் கூடிய தேர்தல் பத்திர நன்கொடை விவரங்களை வெளியிட எஸ்பிஐ அவகாசம் கேட்பது ஏன்? மிக எளிமையான உத்தரவை பின்பற்ற கால அவகாசம் கோருவதை எந்த வகையில் ஏற்பது' என கேள்வி நீதிமன்றம் கேள்வி எழுப்பியது.

'தகவல்கள் ரகசியமாக வைக்கப்பட வேண்டும் என கூறியதால் ரகசியமாக வைக்கப்பட்டுள்ளது' என எஸ்பிஐ வங்கி சார்பில் தெரிவிக்கப்பட்டது. 26 நாட்கள் ஆகிறது இதுவரை என்ன செய்து கொண்டிருந்தீர்கள்? எஸ்பி வங்கியால் செய்ய முடியாத வேலையை எதுவும் நாங்கள் கொடுக்கவில்லை. எஸ்பிஐ வங்கியிடம் இருந்து நேர்மையான செயல்பாட்டை நாங்கள் எதிர்நோக்குகிறோம்' என  தெரிவித்த நீதிமன்றம், நாளை மாலைக்குள் விவரங்களை எஸ்.பி.ஐ வெளியிடவும், மார்ச் 15 ஆம் தேதிக்குள்  எஸ்பிஐ  வங்கியிடம் தேர்தல் பத்திரங்கள் தொடர்பான ஆவணங்களை பெற்று வெளியிட தேர்தல் ஆணையத்திற்கும் உத்தரவிட்டுள்ளது. 

சார்ந்த செய்திகள்

Next Story

'பாஜகவின் செயலை மக்கள் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறார்கள்'-முதல்வர் மு.க.ஸ்டாலின் கருத்து 

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
 'Our people are watching the work of the BJP' - Chief Minister M. K. Stalin's opinion

18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 88 மக்களவைத் தொகுதிகளில் நேற்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது.

இந்நிலையில் 'நிதியும் கிடையாது, நீதியும் கிடையாது' என பாஜக அரசு தமிழகத்தை வஞ்சிப்பதாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதுகுறித்து எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் 'மிக்ஜாம் புயல் மற்றும் வெள்ளப் பாதிப்புகளுக்கான நிவாரணமாகத் தமிழ்நாடு கோரியது 37,907 கோடி ரூபாய். பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடி நிவாரணமாகவும், உட்கட்டமைப்புகளை மறுசீரமைக்கவும் தமிழ்நாடு அரசு மாநிலப் பேரிடர் நிதியில் இருந்து இதுவரை செலவு செய்துள்ளது 2,477 கோடி ரூபாய்.

ஆனால், ஒன்றிய பா.ஜ.க அரசு தற்போது அறிவித்திருப்பதோ வெறும் 276 கோடி ரூபாய். இதுவும் நாம் உச்சநீதிமன்றத்தை நாடிய பிறகே அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டுக்கு நிதியும் கிடையாது, நீதியும் கிடையாது என வஞ்சிக்கும் ஒன்றிய பாஜக அரசின் ஒவ்வொரு செயலையும் நம் மக்கள் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறார்கள்!' எனத் தெரிவித்துள்ளார்.

 

Next Story

பாஜகவை அதிரவைத்த இளைஞன்; தடம் மாறும் தேர்தல் களம் - யார் இந்த பாலைவன புயல்?

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
Ravindra Singh Pati Dhan  who will contest as an independent against the BJP in Rajasthan
பாஜக மத்திய அமைச்சர் ரூபாலா

ராஜஸ்தான் மாநிலத்தில் மொத்தமுள்ள 25 மக்களவைத் தொகுதிகளில் இரண்டு கட்டமாக தேர்தல் நடைபெற்றது. கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி 12 தொகுதிகளுக்கு முதற்கட்டத்தில் வாக்குப்பதிவும், மீதம் உள்ள 13 தொகுதிக்கு கடந்த ஏப்ரல் 26 ஆம் தேதி இரண்டாம் கட்ட வாக்குப்பதிவும் நடந்து முடிந்தது. இதில், ராஜஸ்தானின் பார்மர் தொகுதி தேசிய அளவில் கவனம் பெற்றுள்ளது.

முன்னதாக ராஜஸ்தான் மாநிலத்தின் பெரிய தொகுதியான பார்மர் மக்களவைத் தொகுதியில் இந்த முறை பாஜக சார்பில் மத்திய இணை அமைச்சரான கைலாஷ் சௌத்ரி மீண்டும் களம் இறக்கப்பட்டுள்ளார். அவருக்கு எதிராக காங்கிரஸ் சார்பில் உமேதராம் போட்டியிடுகிறார். இப்படி, இருமுனை போட்டி தொடக்கத்தில் நிலவி வந்த நிலையில், பாஜக மத்திய அமைச்சர் ரூபாலாவின் சர்ச்சை பேச்சை களத்தையே புரட்டிப் போட்டுள்ளது. முன்னதாக கூட்டத்தில் பேசிய ரூபாலா, ராஜ்புத் சமூக ராஜாக்கள், பிரிட்டிஷாருக்கு பெண் கொடுக்கும் அளவுக்கு ஆங்கிலேயர்களிடம் நெருக்கமாக இருந்ததாக வார்த்தையை விட்டு அதன்பின் மன்னிப்பும் கேட்டார். ஆனால், ராஜ்புத் சமூக மக்களோ ரூபாலாவை நிறுத்தினால் நிச்சயம் தேர்தலில் பாஜகவிற்கு பதிலடி கொடுப்போம் என பிரமாண்ட கூட்டத்தை கூட்டி முடிவு எடுத்தனர்.

Ravindra Singh Pati Dhan  who will contest as an independent against the BJP in Rajasthan

அதன் பிறகும் பாஜக ரூபாலாவை திரும்ப பெறவில்லை. இதனால், ராஜ்புத் சமூகமே பாஜகவின் மீது கொதித்துப் போய் உள்ளது. அதன் வெளிப்பாடே ராஜஸ்தானின் பார்மரின் தொகுதியில் 27 வயதான 'ரவீந்திர சிங் பதி தன்' சுயேட்சையாக போட்டியிடுகிறார். இரு தேசிய கட்சிகள் மோதும் களத்தில் ஒரு சுயேட்சை வேட்பாளருக்கு பிரச்சாரத்தில் அமோக ஆதரவு மக்கள் வழங்கியது தேசய அளவில் கவனம் பெற்றது. இளம் வேட்பாளரான ரவீந்திர சிங் ராஜ்புத் சமூகத்தின் தலைவராக உள்ளார். பாஜகவின் மாணவர் அமைப்பில் உறுப்பினராக இருந்த ரவீந்திர சிங், தனது கல்லூரி காலத்தில் ஒரு முறை சுயேட்சையாக கல்லூரி தேர்தலில் போட்டியிட்டார்.

அப்போது, வாய்ப்பு மறுக்கப்பட்டதால் அந்த முறை சுயேட்சையாக போட்டியிட்ட ரவீந்திர சிங் 57 வருட கல்லூரி தேர்தல் வரலாற்றை மாற்றி தலைவராக வெற்றிப் பெற்றார். அதன் பிறகு பாஜவில் இணைந்த ரவீந்திர சிங்கிற்கு கடந்த ராஜஸ்தான் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்டது. இதனால், மீண்டும் சுயேட்சையாக போட்டியிட்டே தனது 26 வயதில் சட்ட மன்றத்தில் நுழைந்தார்.

Ravindra Singh Pati Dhan  who will contest as an independent against the BJP in Rajasthan
ரவீந்திர சிங் பதி தன்'

இத்தகைய சூழலில் நாடு முழுவதும் பாஜகவின் வாக்கு வங்கியாக இருந்த ராஜ்புத் சமூகம், நடைபெரும் நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவிற்கு பாடம் புகட்ட முடிவு எடுத்த நிலையில், மீண்டும் சுயேட்சையாக பார்மரின் மக்களவையில் களம் இறங்கியுள்ளார். அவர் செல்லும் இடங்களுக்கு எல்லாம் உற்சாக வரவேற்பு வழங்கப்பட்டது. தேசிய வேட்பாளர்களுக்கு போட்டியாக கூட்டம் கூடியது. அதனால், இந்த நாடாளுமன்றத் தேர்தலில் சுயேச்சை வேட்பாளர் ரவீந்திர சிங் பாஜகவிற்கு கடும் போட்டியாக இருப்பார் என அரசியல் பார்வையாளர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். பாலைவனப் புயல் என்று அவரது பகுதி மக்களால் அழைக்கப்படும் ரவீந்திர சிங் மக்களவைத் தேர்தலிலும் சுயேச்சை புயாலாக வீசுவார என்ற கேள்விக்கு ஜூன் 4தான் பதில் சொல்லும்.   

நாடு முழுக்க இந்தியா கூட்டணி - பாஜக கூட்டணி இடையே கடுமையான மோதல் நிலவி வரும் நிலையில், ராஜஸ்தான் மாநிலத்தில் சுயேச்சை வேட்பாளர் ஒருவர் தேசிய அளவில் கவனம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.