மேற்கு வங்க மாநிலத்தில் உள்ளாட்சி அமைப்புகளுக்கானத் தேர்தல் அறிவிக்கப்பட்டு அரசியல் கட்சியினர் மற்றும் சுயேச்சை வேட்பாளர்கள் ஆர்வத்துடன் மனுத்தாக்கல் செய்து தீவிரப் பிரசாரம் மேற்கொண்டு வந்தனர். முன்னதாக, வேட்புமனுத் தாக்கலின் போது பல்வேறு இடங்களில் அரசியல் கட்சியினர் இடையே மோதல் ஏற்பட்டது. இந்த மோதல் பின்னர் வன்முறையாக மாறி 12 வயது சிறுவன் உள்ளிட்ட 18 பேர் உயிரிழந்தனர்.
இதையடுத்து மேற்கு வங்க மாநிலத்தில் உள்ளாட்சி அமைப்புகளுக்கானத் தேர்தல் கடந்த சனிக்கிழமை (ஜூலை 08) ஒரேகட்டமாக நடைபெற்றது. இந்தத் தேர்தலில் சுமார் 5 கோடியே 67 லட்சம் பேர் வாக்களிக்கத் தகுதி பெற்று இருந்தனர். அசம்பாவிதங்களைத் தவிர்க்கும் வகையில் சுமார் 65 ஆயிரம் மத்திய காவல்படை போலீசாரும், 70 ஆயிரம் மாநில போலீசாரும் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு இருந்தனர்.
இருப்பினும் கூச்பெகார் என்ற பகுதியில் வாக்குப்பதிவு தொடங்கிய சிறிது நேரத்திலேயே வாக்குச் சாவடிக்குள் புகுந்த மர்ம நபர்கள் சிலர் வாக்குச் சாவடியை சூறையாடினர். அதே பகுதியில் உள்ள மற்றொரு வாக்குப்பதிவு மையம் ஒன்றில் இருந்து வாக்குப் பெட்டியை இளைஞர் ஒருவர் தூக்கிக்கொண்டு ஓட்டம் பிடித்த சம்பவங்களும் நடைபெற்றது. மேலும், ஹூக்ளியில் உள்ள தம்சா வாக்குச் சாவடியில் திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் பாஜக தொண்டர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலுக்குப் பிறகு இரண்டு வாக்குப் பெட்டிகளைக் குளத்தில் வீசினர். பல்வேறு இடங்களில் நடைபெற்ற வன்முறைச் சம்பவங்களால் ஒரே நாளில் 15 பேர் உயிரிழந்தனர்.
இந்நிலையில் கடந்த சனிக்கிழமை நடந்த உள்ளாட்சித் தேர்தலில் ஏற்பட்ட வன்முறையால் மறுவாக்குப்பதிவு நடத்த தேர்தல் ஆணையம் சார்பில் முடிவு செய்யப்பட்டது. அந்த வகையில் புருலியா, பிர்பூம், ஜல்பைகுரி, நதியா மற்றும் தெற்கு 24 பர்கானாஸ் ஆகிய ஐந்து மாவட்டங்களில் உள்ள 697 வாக்குச் சாவடிகளில் மறுவாக்குப்பதிவு இன்று நடைபெற்று வருகிறது. காலை முதல் வாக்காளர்கள் வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர். மேலும் பதற்றமான வாக்குப்பதிவு மையத்தில் மத்தியப் பாதுகாப்புப் படையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.