ஒடிசா ரயில் விபத்தில் தற்போதைய நிலவரப்படி 261 பேர் உயிரிழந்திருப்பதாகத் தகவல் வெளியாகி உள்ளது. மொத்தம் 800 பேர் இந்த ரயிலில் பயணிக்க முன்பதிவு செய்துள்ளதாகவும் சென்னையைச் சேர்ந்த 150க்கும் மேற்பட்டோர் இந்த ரயிலில் வந்ததாகத் தகவல் வெளியாகியுள்ள நிலையில் 900க்கும் மேற்பட்டோர் இதுவரை காயம் அடைந்துள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.
இந்நிலையில் ரயில் விபத்தை தடுக்கும் 'கவாச்' எனும் தொழில்நுட்பத்தை நாடு முழுவதும் உருவாக்க வேண்டும் என்ற குரல் தற்பொழுது சமூக வலைத்தளங்களில் எழுந்து வருகிறது. ரயில் விபத்துகளை தடுக்கும் கவாச் தொழில்நுட்பம் இந்திய ரயில்வேயில் தற்போது தான் நிறுவப்பட்டு வருகிறது. லோகோ பைலட் ஆபத்துக்குரிய வகையில் ஒரு சிக்னலை மீறி செல்லும்போது இந்த தானியங்கி தொழில்நுட்பமான கவாச் எச்சரிக்கும். எதிர்புறத்தில் ரயில் வந்தாலும் 400 மீட்டர் இடைவெளியில் இரு ரயில்களையும் நிறுத்தி விடும். இது ஒரு தானியங்கி பாதுகாப்பு கருவியாகும். இதை ரயில்வே வடிவமைப்பு ஆராய்ச்சி அமைப்பான ஆர்.டி.எஸ்.ஓ உருவாக்கியுள்ளது.
கடந்த ஆண்டு செகந்திராபாத் ரயில் பாதையில் இதற்கான சோதனையும் செய்யப்பட்டது. கவாச் தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்ட இரு ரயில்களில் ஒரு ரயிலில் ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவும் மற்றொரு ரயிலில் வாரிய தலைவர் வி.கே.திருபாதியும் பயணம் செய்து காட்டினர். அப்பொழுது நேர் எதிராக ஒரே டிராக்கில் இயக்கப்பட்ட இரண்டு ரயில்கள் 400 மீட்டருக்கு முன்பாகவே நின்று விட்டது. தற்பொழுது இந்த தொழில்நுட்பத்தை அனைத்து ரயில்வே தடத்திலும் பொருத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
இந்தியாவில் வெறும் 2 சதவிகிதம் மட்டுமே இந்த தொழில்நுட்பம் உள்ளதாகவும், அதுவும் தென்னிந்திய ரயில்களில் அந்த பாதுகாப்பு கருவி இல்லை என்றும் கூறப்படுகிறது. தற்பொழுது விபத்துக்குள்ளான ரயில்களில் கவாச் கருவி இல்லை என்பதையும் ரயில்வே அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர். எனவே கவாச் தொழில்நுட்பத்தை பொருத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.