சரக்கு ரயில்கள் நேருக்கு நேர் மோதி விபத்து நடந்துள்ள சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேற்கு வங்க மாநிலம் பாங்குரா என்ற பகுதியில் இன்று அதிகாலை 4 மணிக்கு 2 சரக்கு ரயில்கள் நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. ரயில் ஓட்டுநர் ஒருவருக்கு மட்டும் லேசான காயம் ஏற்பட்டுள்ளதாகவும் உயிர்ச் சேதம் ஏதும் இல்லை என்று முதல்கட்ட தகவல் தெரிவிக்கின்றன. இந்த விபத்தில் 12 ரயில் பெட்டிகள் தடம் புரண்டுள்ளன. மீட்புப் பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது. இதையடுத்து இந்த வழித்தடத்தில் ரயில்கள் தற்போது ரத்து செய்யப்பட்டுள்ளன. மேலும் கரக்பூர் - பாங்குரா- ஆத்ரா - ரயில் வழித்தடத்தில் ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. மீட்புப் பணிகள் முடிவடைந்த நிலையில் ரயில் போக்குவரத்து தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கு முன்னதாக கடந்த 2 ஆம் தேதி ஒடிசா மாநிலம் பாலசோர் மாவட்டத்தில் பஹாநாஹா பஜார் ரயில் நிலையம் அருகே சரக்கு ரயிலுடன் கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் மோதிய பெரும் விபத்து நாடு முழுவதும் சோகத்தை ஏற்படுத்தி இருந்தது. இந்த துயர சம்பவத்தில் 288 பேர் உயிரிழந்தனர். இந்த விபத்து குறித்து சிபிஐ அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில் மீண்டும் சரக்கு சரக்கு ரயில்கள் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.