மூன்று வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறக் கோரி விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். இந்தநிலையில் பிரதமர் மோடி, இன்று (19.11.2021) வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறுவதாக அறிவித்தார். பிரதமர் மோடியின் இந்த அறிவிப்பிற்கு பல்வேறு அரசியல் கட்சிகளும், விவசாயிகளும் வரவேற்பு தெரிவித்துவருகின்றனர்.
இந்தநிலையில் காங்கிரஸ் மூத்த தலைவர் ப. சிதம்பரம், தேர்தல் பயத்தினாலேயே வேளாண் சட்டங்கள் திரும்பப் பெறப்பட்டுள்ளதாக விமர்சித்துள்ளார். இதுதொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், "ஜனநாயக போராட்டங்களால் சாதிக்க முடியாததை, வரவிருக்கும் தேர்தல்கள் மீதான பயம் சாதிக்கும்" என கூறியுள்ளார்.
மேலும் அவர், "மூன்று வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறுவது குறித்த பிரதமரின் அறிவிப்பு, கொள்கை மாற்றத்தினாலோ அல்லது மனமாற்றத்தினாலோ உந்தப்படவில்லை. இது தேர்தல் பயத்தால் தூண்டப்பட்டது. எது எப்படியோ, இது விவசாயிகளுக்கும், வேளாண் சட்டங்களுக்கு எதிராக உறுதியாக நின்ற காங்கிரஸ் கட்சிக்கும் கிடைத்த மாபெரும் வெற்றி" எனவும் கூறியுள்ளார்.