உத்தரப்பிரதேச மாநிலத்தின் ஃபிரோசாபாத் மாவட்டத்தை மர்மக் காய்ச்சல் உலுக்கி வருகிறது. இதுவரை இந்த மர்மக் காய்ச்சலுக்கு 53 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் 45 பேர் குழந்தைகள். மேலும் 186 பேர் இந்த மர்மக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அனுமதிக்கப்பட்டவர்களில் அதிகம் பேர் குழந்தைகளாவர்.
இந்த மர்மக் காய்ச்சல், டெங்குவாக இருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படுகிறது. இந்த மர்மக் காய்ச்சல் பரவலைத் தொடர்ந்து ஃபிரோசாபாத் மாவட்டத்தில் செப்டம்பர் 6 ஆம் தேதி வரை, ஒன்றாம் வகுப்பிலிருந்து எட்டாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு வகுப்புகளை நடத்தக்கூடாது என அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், கடந்த திங்கட்கிழமை மர்மக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்களைச் சந்தித்ததோடு, மர்மக் காய்ச்சலால் ஏற்பட்டுள்ள மரணங்கள் குறித்து ஆராயக் குழு அமைக்கப்படும் எனத் தெரிவித்தார். மேலும் இன்று ஃபிரோசாபாத் மாவட்ட தலைமை மருத்துவ அதிகாரியை இடைநீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார்.