Skip to main content

மேற்கு வங்க உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவு; வன்முறையால் 5 பேர் உயிரிழப்பு

Published on 08/07/2023 | Edited on 08/07/2023

 

west bengal local body election related incident

 

மேற்கு வங்க மாநிலத்தில் உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் அறிவிக்கப்பட்டு அரசியல் கட்சியினர் மற்றும் சுயேச்சை வேட்பாளர்கள் ஆர்வத்துடன் மனுத்தாக்கல் செய்து தீவிர பிரசாரம் மேற்கொண்டு வந்தனர். முன்னதாக, வேட்புமனுத் தாக்கலின் போது பல்வேறு இடங்களில் அரசியல் கட்சியினர் இடையே மோதல் ஏற்பட்டது. இந்த மோதல் பின்னர் வன்முறையாக மாறி 12 வயது சிறுவன் உள்ளிட்ட 18 பேர் உயிரிழந்தனர்.

 

இந்நிலையில் மேற்கு வங்க மாநிலத்தில் உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் இன்று ஒரேகட்டமாக நடைபெற்று வருகிறது. காலை 7 மணி முதல் வாக்காளர்கள் வாக்குச்சாவடிகளில் வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர். இந்த தேர்தலில் சுமார் 5 கோடியே 67 லட்சம் பேர் வாக்களிக்க உள்ளனர். அசாம்பாவிங்களைத் தவிர்க்கும் வகையில் சுமார் 65 ஆயிரம் மத்திய காவல்படை போலீசாரும், 70 ஆயிரம் மாநில போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

 

இந்நிலையில் மேற்கு வங்க மாநிலம் கூச்பெகார் என்ற பகுதியில் வாக்குச்சாவடிக்குள் புகுந்த மர்ம நபர்கள் சிலர் வாக்குச்சாவடியை சூறையாடினர். மேலும் வாக்குச்சாவடியில் இருந்த வாக்கு சீட்டுகளுக்கும் தீ வைக்கப்பட்டது. இந்த சம்பவத்தை கண்டித்து தேர்தலில் வாக்களிக்கச் சென்ற மேற்கு வங்க ஆளுநர் ஆனந்த் போஸை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர்கள் முற்றுகையிட்டனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. வாக்குச்சாவடி சூறையாடப்பட்ட சம்பவத்தால் அங்கு பதற்றமான சூழல் நிலவி வருகிறது.

 

மேலும் பல்வேறு இடங்களில் நடைபெற்ற வன்முறை சம்பவங்களால் ஒரே நாளில் 5 பேர் உயிரிழந்துள்ளனர். கலவரங்களைத் தடுக்கும் விதமாக போலீசார் தடியடி நடத்தி வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. முன்னதாக முர்ஷிதாப் என்ற இடத்தில் நேற்று நள்ளிரவு காங்கிரஸ் மற்றும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினர் இடையே மோதல் ஏற்பட்டது. இந்த மோதலில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ஒருவர் கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

 

 

சார்ந்த செய்திகள்