மேற்கு வங்க மாநிலத்தை ஆளும் திரிணாமுல் காங்கிரஸுக்கும், அம்மாநில ஆளுநர் சி.வி.ஆனந்த்போஸுக்கும் இடையே சில மாதங்களாக மோதல் போக்கு நிலவி வருகிறது. ஏற்கெனவே, ஆளுநர் மாளிகையில் ஒப்பந்த பணியாளராக பணியாற்றும் பெண் ஒருவர், ஆளுநர் சி.வி.ஆனந்த்போஸ் மீது பாலியல் புகார் அளித்திருந்தார். இது தொடர்பாக போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதற்கிடையில், தேர்தல் நேரத்தில் கொல்கத்தாவில் கடந்த ஜனவரி மாதம் நடைபெற்ற நிகழ்ச்சியில் பா.ஜ.கவின் சின்னமான தாமரை சின்னத்தை ஆடையில் அணிந்து அக்கட்சிக்கு ஆதரவாக பிரச்சாரத்தில் ஈடுபட்டதாக அம்மாநில ஆளுநர் சி.வி.ஆனந்த் போஸ் மீது திரிணாமுல் காங்கிரஸ் தேர்தல் ஆணையத்திடம் புகார் அளித்திருந்தது. இப்படிபட்ட பரபரப்பான மோதல் போக்கு நிலவி வரும் நிலையில், ஆளுநர் மாளிகையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார்களை உடனடியாக வெளியேற வேண்டும் என்று அம்மாநில ஆளுநர் உத்தரவிட்டு நோட்டீஸ் அனுப்பினார். இருப்பினும், மேற்கு வங்க ஆளுநர் மாளிகையில் போலீசார் தொடர்ந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், தான் பாதுகாப்பாக இல்லை என ஆளுநர் சி.வி.ஆனந்த் போஸ் கூறி பரபரப்பை கிளப்பியுள்ளார். இது தொடர்பாக நேற்று (20-06-24) கொல்கத்தாவில் ஆளுநர் சி.வி.ஆனந்த்போஸ் செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார். அப்போது அவர், “தற்போதைய பொறுப்பதிகாரி மற்றும் அவரது குழுவினர்களால் எனது தனிப்பட்ட பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருப்பதாக நான் நம்புகிறேன். ராஜ்பவனில் கொல்கத்தா காவல்துறையினரிடம் நான் பாதுகாப்பற்ற நிலையில் இருப்பதாக முதல்வர் மம்தா பானர்ஜியிடம் தெரிவித்தேன். ஆனால், இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை.
இங்கு பணியமர்த்தப்பட்டுள்ள காவலர்கள் எனது நடமாட்டத்தையும், எனது அதிகாரிகள் பலரையும் கண்காணித்து வருகின்றனர். அவர்களின் செயல்கள் அரசாங்கத்தில் உள்ள அவர்களின் அரசியல் எஜமானர்களின் மறைமுக ஆதரவுடன் உள்ளன. இது அரசியலமைப்புச் சட்டத்தை மீறுவதாகும்” என்று கூறினார்.