இந்தியாவில் கோவிஷீல்ட், கோவாக்சின் ஆகிய தடுப்பூசிகள் முழு வீச்சில் செலுத்தப்பட்டுவருகின்றன. இந்நிலையில், கரோனா வைரஸிடமிருந்து மக்களைப் பாதுகாக்க பூஸ்டர் டோஸ் தடுப்பூசிகள் செலுத்தப்பட வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. அதேநேரத்தில், மத்திய அரசின் நிபுணர்கள் பூஸ்டர் ஷாட்கள் தேவை என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை என தெரிவித்துவந்தனர்.
இந்தநிலையில், இந்தியாவில் கரோனா வைரஸை மரபணு வரிசைமுறை சோதனை செய்யும் ஆய்வகங்களின் கூட்டமைப்பான 'ஐஎன்எஸ்ஏசிஓஜி', 40 மற்றும் அதற்கு மேற்பட்ட வயதினருக்கு கரோனா தடுப்பூசிகளின் பூஸ்டர் ஷாட்களை செலுத்துவது குறித்து பரிசீலிக்கலாம் என பரிந்துரை செய்துள்ளது.
தற்போதைய தடுப்பூசிகளில் உள்ள குறைவான ஆன்டிபாடிகள், ஒமிக்ரான் கரோனாவை அழிப்பதற்கு போதுமானதாக இல்லாமல் இருக்கலாம் என்பதால் பூஸ்டர் ஷாட்கள் செலுத்துவது குறித்து ஆலோசிக்கலாம் என அந்தக் கூட்டமைப்பு கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே சீரம் நிறுவனம், கோவிஷீல்ட் தடுப்பூசியின் பூஸ்டர் ஷாட்களுக்கு அனுமதி கோரி விண்ணப்பித்துள்ளது கவனிக்கதக்கது.