நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் மேற்கு வங்க மாநிலத்தில் ஆளும் திரிணாமூல் காங்கிரஸ் கட்சி குறைந்த தொகுதிகளை மட்டுமே கைப்பற்றியது. அம்மாநிலத்தில் மொத்தம் உள்ள 42 மக்களவை தொகுதிகளில் முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமூல் காங்கிரஸ் கட்சி 22 இடங்களையும், பாஜக கட்சி 18 இடங்களையும், காங்கிரஸ் கட்சி 2 இடங்களும் கைப்பற்றியது. இந்நிலையில் தேர்தலில் குறைவான இடங்களை மட்டுமே திரிணாமூல் காங்கிரஸ் கட்சி கைப்பற்றியதால், அக்கட்சியின் நிர்வாகிகளுக்குள் ஏற்பட்ட அதிருப்தி காரணமாக பாஜகவுக்கு சென்றனர். இதில் திரிணாமூல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள், சட்டமன்ற உறுப்பினர்கள், கட்சியின் முக்கிய தலைவர்கள் என அனைவரும் பாஜகவில் இணைந்தன.
இதன் மூலம் மேற்கு வங்க மாநில முதல்வர் மம்தா பானர்ஜிக்கு மறைமுக நெருக்கடியை பாஜக கட்சி கொடுத்தது. இந்நிலையில் அம்மாநில சட்டப்பேரவையில் நேற்று பேசிய முதல்வர் மம்தா பானர்ஜி பாஜகவிற்கு எதிராக காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட கட்சிகள் திரிணாமூல் காங்கிரஸ் கட்சி கூட்டணியில் சேருமாறு அழைப்பு விடுத்தார். மேலும் அவர் கூறுகையில் பாஜவுக்கு தக்க பதிலடி கொடுக்க நாம் இணைய வேண்டும் என்றும், அப்போது தான் பாஜக கட்சியை வீழ்த்த முடியும் என கூறினார். இதன் மூலம் திரிணாமூல் காங்கிரஸ் கட்சி 2021 ஆம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தல் பணியை தொடங்கியது என்றே கூறலாம்.
இதில் மேற்கு வங்க மாநிலத்தின் திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் 25 ஆண்டு கால அரசியல் எதிரியான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை கூட்டணியில் சேருமாறு அழைத்துள்ளது என்பது முக்கியத்துவம் வாய்ந்தது. முதல்வரின் அழைப்பை ஏற்று பல்வேறு கட்சிகளும் இணையும் என எதிர்பார்க்கப்படுகிறது. பிரதமர் நரேந்திர மோடிக்கும், பாஜகவுக்கும் எதிராக முதல்வர் மம்தா புதிய வியூகம் வகுத்துள்ளதால், மேற்கு வங்க பாஜக கட்சியின் தொண்டர்கள் அதிர்ச்சி அடைந்தன. அதே போல் பாஜக மேலிடம் மேற்கு வங்க மாநில சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ள தயாராகி வருகிறது. இதனால் மேற்கு வங்க அரசியல் களம் மீண்டும் சூடுப்பிடித்துள்ளது.