இந்தியாவில் கரோனாவின் இரண்டாவது அலை தீவிரமாகி வருகிறது. இந்தநிலையில் தமிழகம், மேற்கு வங்கம் உள்ளிட்ட ஐந்து மாநிலங்களின் சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை மே 2 ஆம் தேதி நடைபெற இருக்கிறது. இந்தநிலையில், வாக்கு எண்ணிக்கையின்போது கரோனா தடுப்பு விதிகளைப் பின்பற்றக் கோரி கரூர் சட்டமன்றத் தொகுதியின் அதிமுக வேட்பாளரும், அமைச்சருமான எம்.ஆர்.விஜயபாஸ்கர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கு நேற்று (26.04.2021) சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி அமர்வு, “கரோனா இரண்டாவது அலை பரவலுக்கு தேர்தல் ஆணையமே காரணம். அரசியல் கட்சிகளும் இஷ்டம் போல் பிரச்சாரம் செய்ததே கரோனா பரவலுக்கான காரணம். நீதிமன்றம் எவ்வளவு அறிவுறுத்தியும் தேர்தல் ஆணையம் காதில் வாங்கவில்லை. தேர்தல் ஆணையத்தின் மீது கொலைக் குற்றம் சுமத்தினாலும் தவறில்லை. பிரச்சாரம் நடந்தபோதெல்லாம் வேற்று கிரகத்தில் இருந்தீர்களா? கரோனா தடுப்பு விதிகளை முறையாகப் பின்பற்றாவிடில் வாக்கு எண்ணிக்கைக்குத் தடை விதிக்க நேரிடும்" என தேர்தல் ஆணையத்தை கடுமையாக விமர்சித்தது.
இந்தநிலையில், சென்னை உயர் நீதிமன்றம், தேர்தல் ஆணையத்தை விமர்சித்ததில் சதி இருக்கிறதென்றும், இதுகுறித்து விசாரணை நடத்த வேண்டும் எனவும் மேற்கு வங்க பாஜக செய்தித் தொடர்பாளர் சாமிக் பட்டாச்சார்யா கூறியுள்ளார். இதுகுறித்து அவர், "இதனை நீதித்துறை மீது முழு மரியாதையுடன் சொல்கிறேன். சென்னை உயர் நீதிமன்றத்தின் வார்த்தைகள் முழு நீதி அமைப்பையும் களங்கப்படுத்தியுள்ளது. மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கூறுவதும், சென்னை உயர் நீதிமன்றம் கூறியதும் கிட்டத்தட்ட ஒரே மாதிரியானவை. இதுகுறித்து விசாரிக்கப்பட வேண்டும்" என தெரிவித்துள்ளார்.
"மக்களுக்காகத்தான் நீதித்துறை அமைக்கப்பட்டுள்ளது. மக்களுக்காகத்தான் நீதிமன்றங்கள் அமைக்கப்பட்டுள்ளன. வேறு எதற்காகவும் இல்லை. ஜனநாயகத்தின் இடம் மிக உயர்ந்தது. எல்லா இடங்களிலும் ஜனநாயகம் வெல்லும்" என கூறியுள்ள சாமிக் பட்டாச்சார்யா, கரோனா இரண்டாவது அலை, செயற்கையான சிறிய (கரோனா) நெருக்கடி எதுவாக இருந்தாலும், அது தற்போதைய தேர்தலில் அற்பமான அரசியலுக்காக தவறாக பயன்படுத்தப்படுகிறது" என தெரிவித்துள்ளார்.
மேலும் அவர், "நீதிமன்றம் கூறிய அனைத்தும் மிகவும் வருத்தமளிப்பவை. இது ஒரு சதி. தேவைப்பட்டால் உச்ச நீதிமன்றம் இதுகுறித்து தானாக முன்வந்து நடவடிக்கை எடுக்கும் என நினைக்கிறேன்" என கூறியுள்ளார். உயர் நீதிமன்றம் தேர்தல் ஆணையம் குறித்து தெரிவித்த கருத்துகளுக்குப் பின் சதி இருப்பதாகவும், அதுகுறித்து விசாரிக்க வேண்டும் என பாஜக செய்தித் தொடர்பாளர் கூறியிருப்பது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.