புதுச்சேரியில் பொது இடங்கள், பூங்காக்கள், திரையரங்குகளில் முகக்கவசம் அணிவது கட்டாயம் எனப் புதுச்சேரி அரசு அறிவித்துள்ளது. இதுகுறித்து புதுச்சேரி மாவட்ட ஆட்சியர் வல்லவன் செய்தி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில் குறிப்பிட்டிருப்பதாவது, "மக்கள் அனைவரும் அனைத்துப் பொது இடங்கள், கடற்கரைச் சாலை, பூங்காக்கள் மற்றும் திரையரங்குகளில் கண்டிப்பாக முகக்கவசம் அணிந்து சமூக விலகலை கடைப்பிடிக்க வேண்டும். புது வருட கொண்டாட்டங்களுக்கு 01/01/2023 அன்று பின்னிரவு 01.00 மணிக்குமேல் தடை விதிக்கப்பட்டுள்ளது. அதேசமயம் அனைத்து உணவகங்கள், ஹோட்டல்கள், பார்கள், மதுபானக் கடைகள், விருந்தோம்பல் மற்றும் கேளிக்கைத் துறை நிறுவனங்கள் உரிய தடுப்பு நடைமுறைகளை (SOP) பின்பற்றி தங்களின் வழக்கமான நேரங்களில் செயல்பட அனுமதி வழங்கப்படுகிறது. அனைத்து ஊழியர்களும் முகக்கவசம் அணிவது மட்டுமல்லாது மற்றும் இரண்டு தவணை தடுப்பூசிகள் போடப்பட்டிருக்கிறார்களா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும். அனைத்து தனியார் கடைகள் மற்றும் தொழில் நிறுவனங்களும் தங்களின் சராசரி நேரங்களில் செயல்பட அனுமதி வழங்கப்படுகிறது. ஆனால் அங்கு பணி புரியும் ஊழியர்கள் அனைவரும் 100% தடுப்பூசி போட்டுள்ளனர் என்று உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும்.
அனைத்துக் கல்வி நிறுவனங்களும் கோவிட் 19 தடுப்புக்குரிய நடைமுறைகளின் (SOP) படி செயல்பட வேண்டும். மேலும் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்குச் செல்லும்போது அனைத்து மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் இதர ஊழியர்கள் கட்டாயம் முகக்கவசம் அணிவதை உறுதி செய்ய வேண்டும். அனைத்து வழிபாட்டுத் தலங்களிலும் முன்பு பின்பற்றிய கோவிட்-19 தடுப்புக்குரிய நடைமுறைகளைப் (SOP) பின்பற்றி செயல்பட வேண்டும்.