இந்தியாவில் கரோனா தொற்று பரவல் மீண்டும் அதிகரித்து வருகிறது. சில மாநிலங்களில் ஊரடங்கு, இரவு நேர ஊரடங்கு ஆகியவை அமல்படுத்தப்பட்டுள்ளன. இந்த நிலையில் இன்று அதிகரித்து வரும் கரோனா பரவல் குறித்தும், தடுப்பூசி செலுத்தும் திட்டம் குறித்தும் மாநில முதல்வர்களோடு பிரதமர் மோடி காணொளி வாயிலாக ஆலோசனை நடத்தினர்.
மாநில முதல்வர்களோடு நடத்திய ஆலோசனைக் கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியதாவது, "இன்று இந்தியாவில் கரோனாவால் பாதிக்கப்பட்ட 96%-க்கும் அதிகமானோர் குணமாகியுள்ளனர். இறப்பு விகிதம் மிகக் குறைவான நாடுகளில் இந்தியாவும் ஒன்று. உலகில் கரோனாவால் பாதிக்கப்பட்ட பெரும்பாலான நாடுகள் கரோனாவின் பல அலைகளை எதிர்கொள்ள வேண்டியிருந்தது. நம் நாட்டிலும், சில மாநிலங்களில் திடீரென கரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. முதல்வர்களும் கவலை தெரிவித்துள்ளனர். மகாராஷ்டிரா மற்றும் மத்திய பிரதேசத்தில் கரோனா தொற்று உறுதியாகும் நபர்களின் எண்ணிக்கை மிக அதிகமாக உள்ளது. கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. இதுவரை தங்களை பாதுகாத்துக் கொண்ட மற்றும் பாதுகாப்பான மண்டலங்களாக இருந்த பல மாவட்டங்களில் கரோனா தொற்று பரவலின் அதிகரிப்பு காணப்படுகிறது. நாட்டின் 70 மாவட்டங்களில், கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை கடந்த சில வாரங்களில் 150% க்கும் அதிகமாக உயர்ந்துள்ளது. நாம் அதை இங்கே நிறுத்தவில்லை என்றால், நாடு முழுவதும் கரோனா அலை ஏற்படும்.
வளர்ந்து வரும் கரோனாவின் இரண்டாவது அலையை நாம் உடனடியாக நிறுத்த வேண்டும், இதற்காக, விரைவான மற்றும் தீர்க்கமான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். முன்கூட்டியே செயல்படுவது நமக்கு இப்போது அவசியமாகிவிட்டது. தேவையான இடங்களில் சிறிய அளவிலான நோய்க் கட்டுப்பட்டு மண்டலங்களை உருவாக்குவதில் நாம் மென்மைத்தன்மையை கடைப்பிடிக்கக்கூடாது. சில பகுதிகளில் மட்டும் ஏன் கரோனா பரிசோதனை குறைவாக உள்ளது. இந்தப் பகுதிகளில் ஏன் தடுப்பூசி செலுத்தப்படுவது குறைவாக உள்ளது? என்பது நாம் சிந்திக்க வேண்டிய விஷயம். இது நல்லாட்சிக்கான சோதனை நேரம் என்று நான் நினைக்கிறேன். நம் நம்பிக்கை அதீத நம்பிக்கையாக மாறக்கூடாது. நமது வெற்றி அலட்சியமாக மாறக்கூடாது.
நாம் பொதுமக்களை பீதியடையச் செய்யவேண்டியதில்லை. பயமுறுத்தும் சூழ்நிலையை நாம் கொண்டுவரவேண்டியதில்லை. சில முன் எச்சரிக்கைகள் மற்றும் முன்முயற்சிகளை மேற்கொள்வதன் மூலம் மக்களை சிரமங்களிலிருந்து விடுவிக்க வேண்டும். தெலுங்கானா, ஆந்திரா, உத்தரபிரதேசத்தில் 10% க்கும் மேற்பட்ட தடுப்பூசி மருந்துகள் விரயமாகியுள்ளது. தடுப்பூசி வீணாவது எதனால் நடக்கிறது என்று மாநிலங்களில் மதிப்பாய்வு செய்யப்பட வேண்டும். தடுப்பூசி வீணாகாமல் தடுக்க விழிப்புடன் செயல்பட வேண்டும்" இவ்வாறு பிரதமர் மோடி உரையாற்றினார்.