புதுச்சேரியில் இந்திய தொழில்துறை கூட்டமைப்பு சார்பில் 1 லட்சம் முகக் கவசம், ஆக்ஸிஜன் ப்லொ மீட்டர் ஆகியவை கரோனா தடுப்பு முறைகளுக்கு வழங்கப்பட்டது. இதனை துணைநிலை ஆளுநர் தமிழிசை பெற்றுக்கொண்டு சுகாதாரத்துறையிடம் வழங்கினார்.
தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த தமிழிசை, "தற்போது கரோனா நோய்த்தொற்று அதிகரித்துவருகிறது. இதனைக் கட்டுப்படுத்த அனைவரும் தடுப்பூசி செலுத்திக்கொள்ள முன்வர வேண்டும். ஓரிரு நாட்களில் 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி செலுத்த நடவடிக்கை எடுக்கப்படும். கதிர்காமம் அரசு மருத்துமனையில் 400 ஆக்ஸிஜன் படுக்கைகள் தயார்படுத்தப்பட்டுவருகிறது" என்றார்.
இதேபோல், "பெரிய மார்க்கெட் விவகாரத்தில் வியாபாரிகள் கோரிக்கையை ஏற்று அங்கேயே செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் தங்களைப் பாதுகாத்துக்கொள்ள அரசோடு ஒத்துழைக்க வேண்டும்" என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.