அடுத்த வருடம் நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவிற்கு எதிராகக் கூட்டணி அமைப்பது குறித்துப் பல்வேறு எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து பேசி வருகின்றனர். அந்த வகையில் பீகார் மாநிலம் பாட்னாவில் கடந்த 23 ஆம் தேதி நடைபெற்ற கூட்டத்தைத் தொடர்ந்து எதிர்க்கட்சித் தலைவர்களின் 2வது ஆலோசனைக் கூட்டம் பெங்களூருவில் நேற்று தொடங்கியது. அதனைத் தொடர்ந்து இரண்டாவது நாளாக இந்த கூட்டம் இன்று (18.7.2023) நடைபெற்றது. இந்தக் கூட்டத்திற்கு காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தலைமை தாங்கினார். 26 எதிர்க்கட்சிகளின் சார்பாக இந்த கூட்டம் நடைபெற்றது. இன்று மதியம் 12:00 மணிக்குத் தொடங்கிய கூட்டம் பிற்பகல் 3 மணி வரை நடைபெற்றது.
இந்நிலையில் எதிர்க்கட்சிக் கூட்டணியில் இணைந்துள்ள 26 கட்சிகளும் ஒன்றிணைந்து கூட்டாக அறிக்கை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில், 'மணிப்பூரில் ஏற்பட்டுள்ள வன்முறையால் மக்கள் படும் துயரங்கள் கவலை அளிக்கிறது. ஆனால் பிரதமர் மோடி இதில் மவுனம் காப்பது அதிர்ச்சி ஏற்படுத்துவதாக உள்ளது. மணிப்பூரில் மீண்டும் அமைதியையும் நல்லிணக்கத்தையும் கொண்டு வருவது அவசரத் தேவை. ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசுகளின் உரிமைகள் பறிக்கப்படுவதைத் தடுக்க உறுதிமொழி எடுத்திருக்கிறோம். அரசியல் சட்டத்தின் மீது பாஜக அரசால் நடத்தப்படும் தாக்குதலைத் தடுக்க உறுதி பூண்டுள்ளோம். இந்திய அரசியலின் கூட்டாட்சி கட்டமைப்பைப் பலவீனப்படுத்தத் திட்டமிட்ட முயற்சி நடத்தப்படுகிறது. எதிர்க்கட்சி ஆளும் மாநிலங்களில் ஆளுநர்களின் நடவடிக்கைகள் அரசியல் சட்ட வரம்புகளை மீறி வருகிறது. அரசு அமைப்புகளை பாஜக அரசு எதிர்க்கட்சிகளுக்கு எதிராகப் பயன்படுத்துவது ஜனநாயகத்தை முடக்கும் செயலாகும்.
பாஜக அல்லாத கட்சிகள் ஆளும் மாநிலங்களின் நியாயமான தேவைகளும் கோரிக்கைகளும் ஒன்றிய அரசால் நிராகரிக்கப்படுகிறது. வேலையில்லாத் திண்டாட்டம், விலைவாசி உயர்வுக்கு எதிராகப் போராட எதிர்க்கட்சிகள் உறுதி பூண்டுள்ளோம். பணமதிப்பு இழப்பு நடவடிக்கையால் சிறு, குறு நடுத்தர தொழில்களில் பணிபுரிந்த பல லட்சம் பேர் வேலை இழந்துள்ளனர். ஆள்வோருக்கு நெருக்கமான நண்பர்களுக்கு நாட்டின் வளங்கள் கண்மூடித்தனமாக விற்கப்படுகிறது. பாஜக ஆட்சியில் இந்திய குடியரசின் அமைப்பு திட்டமிட்டு கடுமையான தாக்குதலுக்கு ஆளாகி வருகிறது. நாட்டின் வரலாற்றில் சிக்கலான கட்டத்தில் நாம் இருப்பதாக உணருகிறோம். மதச்சார்பின்மை, ஜனநாயகம், பொருளாதாரம், இறையாண்மை, சமூக நீதி ஆகியவை இந்திய அரசியல் சட்டத்தின் அடிப்படை தூண்கள், இந்திய அரசியல் சட்டத்தின் அடிப்படை தூண்களைத் திட்டமிட்ட முறையில் பாஜக அரசு சிதைத்து வருகிறது' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.