இந்த ஆண்டிற்கான நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் நேற்று (31-01-2024) குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவின் உரையுடன் தொடங்கியது. அந்த வகையில் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் இரண்டாம் நாளான இன்று (01-02-2024) மத்திய அரசின் 2024 - 2025 ஆம் ஆண்டிற்கான இடைக்கால பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். இந்நிலையில், நாடாளுமன்ற மக்களவையில் மத்திய அரசின் இடைக்கால பட்ஜெட்டை நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்து உரை நிகழ்த்தி வருகிறார்.
அதில், “2014 ஆம் ஆண்டுக்கு முன்பு இந்தியா பல்வேறு சவால்களை சந்தித்தது. கடந்த 10 ஆண்டுகளில் இந்தியப் பொருளாதாரம் வளர்ச்சிப்பாதையில் பயணிக்கிறது. பாஜக ஆட்சியில் அமர்ந்த பிறகு இந்திய பொருளாதாரம் ஊக்கம் பெற்றது. இதன் மூலம் நாட்டு மக்கள் புதிய நம்பிக்கையைப் பெற்றுள்ளனர். எனவே மக்கள் மீண்டும் பாஜகவுக்கு வாக்களிப்பார்கள். 2047 இல் புதிய இந்தியாவை படைப்போம். சமூக நீதியே பாஜக அரசின் பிரதான நோக்கம் ஆகும். 25 கோடி மக்களை வறுமையில் இருந்து மீட்டுள்ளோம். ஏழைககள், விவசாயிகள், இளைஞர்கள் மற்றும் பெண்கள் என 4 தரப்பினரின் முன்னேற்றத்திற்கும் பாஜக அரசு முக்கியத்துவம் அளித்து வருகிறது. ஏழைகளின் முன்னேற்றமே நாட்டின் முன்னேற்றமாக கருதி அரசு செயல்படுகிறது. அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி என்பதில் எங்கள் அரசு உறுதியாக உள்ளது. கடந்த 10 ஆண்டுகளில் நாட்டு மக்கள் ஏதேனும் ஒரு வகையில் பலன் அடைந்து வந்துள்ளனர். ஊழல் எதிர்ப்புக்கும், வாரிசு அரசியலுக்கும் எதிராக போராடி வருகிறோம்.
நாடு முழுவதும் மருத்துவக்கல்லூரிகள் அமைப்பது தொடர்பாக தனிக்குழு அமைக்கப்படும். ஏற்கெனவே உள்ள மருத்துவமனைகளில் புதிதாக மருத்துவக்கல்லூரிகள் அமைக்கப்படும். அடுத்த 5 ஆண்டுகளில் இதுவரை இல்லாத அளவுக்கு வளர்ச்சி இருக்கும். கடந்த 10 ஆண்டுகளில் நாடு முழுவதும் 15 எய்ம்ஸ் மருத்துவமனைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. ரூ. 34 லட்சம் கோடி உதவித்தொகை நேரடியாக ஏழை மக்களின் ஜன்தன் வங்கிக் கணக்குகளில் செலுத்தப்பட்டுள்ளது. நாட்டில் 11.8 கோடி விவசாயிகளுக்கு நேரடியாக உதவித்தொகை வழங்கப்படுகிறது. முத்ரா திட்டத்தின் கீழ் 43 கோடி முறை வங்கிக்கடன்கள் வழங்கப்பட்டுள்ளன. திறன் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் 3 ஆயிரம் ஐ.டி.ஐக்கள் தொடங்கப்பட்டுள்ளது. அடுத்த 5 ஆண்டுகளில் கிராமப்புறங்களில் 2 கோடி வீடுகள் கட்டப்படும். ஆயுஷ்மான் பாரத் திட்டத்தில் அனைத்து அங்கன்வாடி ஊழியர்களும் சேர்க்கப்படுவார்கள்.
விவசாயிகளின் வருமானத்தை அதிகரிப்பதற்கான திட்டங்கள் செயல்படுத்தப்படும். இந்தியாவில் செஸ் கிராண்ட் மாஸ்டர்கள் எண்ணிக்கை 80 ஆக அதிகரித்துள்ளது. ஒரு கோடி வீடுகளில் சூரிய ஒளி மின்சாரம் திட்டம் அமல்படுத்தப்படும். மகளிர் இட ஒதுக்கீடு, முத்தலாக் தடை போன்ற பெண்களுக்கான சட்டங்களை பாஜக அரசு நிறைவேற்றி உள்ளது. நாட்டின் பணவீக்கம் அதிகமாக இருந்தபோது ஜி 20 மாநாட்டை வெற்றிகரமாக நடத்தி முடித்தோம். தற்போது நாட்டின் பணவீக்கம் கட்டுக்குள் இருக்கிறது. கொரோனா பெருந்தொற்றை எதிர்கொள்ள உலக நாடுகள் தடுமாறிய நிலையில், இந்தியா சிறப்பாக கையாண்டது” எனத் தெரிவித்தார்.